பாரிஸ்: கால்பந்தாட்ட உலகில் யார் சிறந்த வீரர் என எப்போதுமே காரசாரமான விவாதம் இருக்கும். அதுவும் அசாத்திய திறன் படைத்த அர்ஜென்டீனாவின் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகலின் ரொனால்டோ இடையேயான ஒப்பீடுகள் காரசாரமாக இருக்கும். இருவரது ஆதரவாளர்களும் தங்களது மனம் கவர்ந்த வீரர்கள் குறித்து கொஞ்சம் தூக்கலாக தூக்கி சொல்வது வழக்கம். அவர்கள் இருவரும் அதற்கு பொருத்தமானவர்களும் கூட.
கால்பந்து உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாக வெறும் 60 சொச்சம் நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அந்த ஒப்பீடு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கச் செய்யும். இதில் கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது, பொதுவானவர்களும் கூட தங்களது கருத்தை சொல்வது வழக்கம். நவீன கால்பந்து விளையாட்டின் தரமான வீரர்களில் இவர்கள் இருவரும் முதல் வரிசையில் இருப்பதே அதற்குக் காரணம்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான ஒப்பீடுகள் பொதுவாக அவர்கள் பதிவு செய்த கோல்களின் அடிப்படையில் தான் இருக்கும். அது எப்படி இருக்கும் என்றால் ‘கோவில்’ படத்தில் ‘புல்லட்டு பாண்டி’-யாக வரும் வடிவேலு கதாப்பத்திரம் சொல்வதை போல இருக்கும். ‘தப்பு பெருசா? பேண்டு பெருசா?’ என்ற ரகத்தில் மெஸ்ஸி - ரொனால்டோ ஒப்பீடுகள் இருக்கும். என்ன அந்தப் படத்தில் வடிவேலு வேடிக்கையாக சொல்லியிருப்பார். ஆனால் மெஸ்ஸி - ரொனால்டோ ஒப்பீடு ரணகளமாக இருக்கும். ரசிகர்கள் எல்லோரையும் இங்கு ஒற்றைப் புள்ளியில் இணைப்பது கால்பந்து விளையாட்டு மட்டுமே.
அவர்கள் இருவரும் விளையாடுவது தேசிய அணிக்கோ அல்லது கிளப் அணிக்கோ. அது எதுவாக இருந்தாலும் இந்த ஒப்பீடுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். இந்தச் சூழலில் பிஎஸ்ஜி அணிக்காக ஒலிம்பிக் லியானஸ் அணிக்கு எதிராக நேற்று ஒரு கோல் பதிவு செய்திருந்தார் மெஸ்ஸி. அந்த ஒற்றை கோலின் மூலம் இப்போது அவர் ரொனால்டோவை முந்தியுள்ளார்.
அதாவது, பெனால்டி வாய்ப்பை சேர்க்காமல் அதிக கோல் பதிவு செய்தவராக உள்ளார் மெஸ்ஸி. பெனால்டி அல்லாத கோல் கணக்கில் மெஸ்ஸி 672 கோல்களும், ரொனால்டோ 672 கோல்களும் பதிவு செய்துள்ளனர். விரைவில் இதில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.