யுவராஜ் சிங் | கோப்புப்படம் 
விளையாட்டு

அந்த நாள் ஞாபகம்: டி20-யில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசி யுவராஜ் சாதனை படைத்த நாள் இன்று

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத அற்புத தருணங்களில் ஒன்று தான் கடந்த 2007 டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் யுவராஜ் சிங் விளாசிய அந்த ஆறு சிக்ஸர்கள். இன்றளவும் அது சாதனையாக பார்க்கப்படுகிறது. முதல் டி20 உலகக் கோப்பையில் இந்த சாதனை படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கால சக்கரத்தை அப்படியே பின்னோக்கி தள்ளி 2007, செப்டம்பர் 19 டர்பன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை குரூப் சுற்றுப் போட்டியை கொஞ்சம் நினைவு கொள்வோம். அந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது.

18-வது ஓவரை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஃபிளின்டாப் வீசி இருந்தார். அப்போது அவரும், யுவராஜும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். யுவராஜ் கடுங்கோபத்தில் இருந்தது டிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. அடுத்த ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீசி இருந்தார். அந்த ஓவரை ஒரு கை பார்த்தார் யுவராஜ். மிட்விக்கெட், பேக் வேர்ட் பாயிண்ட், பேக் வேர்ட் ஸ்கொயர் லெக் என அத்தனை திசையிலும் பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே சிக்ஸர்களாக பறக்க விட்டிருந்தார் யுவராஜ். 12 பந்துகளில் அரை சதமும் கடந்து அசத்தினார். 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவர் அவுட்டாகி இருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 362.50.

அந்தப் போட்டியில் இந்திய அணி 218 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி அதை விரட்டி வெறும் 200 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது. கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி மற்றும் கிப்ஸ் போன்ற வீரர்களுக்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசிய நான்காவது வீரர் என்ற சாதனையை யுவராஜ் படைத்தார்.

இந்திய அணி 2007-ல் உலகக் கோப்பை வெல்ல யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டமும் பிரதான காரணம். அதேத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதியில் அற்புதமாக விளையாடி 70 ரன்கள் எடுத்து இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறவும் உதவி இருந்தார் யுவராஜ்.

SCROLL FOR NEXT