விசாகப்பட்டணத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.
அதிர்ஷ்டக்கார பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களுடனும், அடில் ரஷீத் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் அருமையாக ஆடி அரைசதம் எடுத்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ உமேஷ் யாதவ் பந்தை லெக் திசையில் ஆட முனைந்து தோல்வி அடைந்தார், பந்து பேடில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது.
ஸ்டோக்ஸும், பேர்ஸ்டோவும் இணைந்து மிக முக்கியமாக 6-வது விக்கெட்டுக்காக 110 ரன்களைச் சேர்த்தனர்.
பென் ஸ்டோக்ஸ் இன்று 21 ரன்களில் இருந்த போது அஸ்வினின் அபாரமான பந்தில் பீட்டன் ஆனார் ஸ்டோக்ஸ் அவரது பின்கால் கிரீசிற்குள் இல்லை, பந்தை சேகரிப்பதில் தடுமாறிய சஹா ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்டார். கடந்த டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து 2 கேட்ச்களை ஸ்டோக்ஸிற்கு கேட்ச் விட்டு அவர் சதம் எடுத்தது நினைவு கூரத்தக்கது.
இன்று காலை முதல் பந்தே அஸ்வின், பேர்ஸ்டோவுக்கு ரிவியூ செய்தார் ஆனால் அது விரயமானதோடு இந்தியாவின் ரிவியூ வாய்ப்பையும் காலி செய்தது.
பேர்ஸ்டோ ஸ்வீப் செய்ய முயன்றார். பந்து அவரது கிளவ்வில் பட்டதை கவனிக்காத அஸ்வின் நடுவர் நாட் அவுட்டுக்கு எதிராக ரிவியூ செய்து தோல்வியடைந்தார். இந்திய அணியின் ரிவியூ தீர்ந்த நிலையில் இங்கிலாந்து இன்னமும் 264 ரன்கள் பின் தங்கியுள்ளது. பாலோ ஆனைத் தவிர்க்க இங்கிலாந்து இன்னும் 65 ரன்கள் எடுக்க வேண்டும், அதற்குள் சுருட்ட வாய்ப்பு உள்ளது, பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினால் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.