குஜராத்: கடந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) 'வளர்ந்து வரும் சிறந்த வீரர்' விருதை வென்ற சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.
21 வயதான சுப்மன் கில், கடந்த ஆண்டே தொடங்கப்பட்டு கோப்பை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார். கடந்த சீசனில் 132.33 ஸ்ட்ரைக் ரேட்டுடன் குஜராத் அணிக்காக 16 போட்டிகளில் 483 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், குஜராத் அணியில் இருந்து சுப்மன் கில் வெளியேறியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், குஜராத் டைட்டன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "இது நினைவில் கொள்ள வேண்டிய பயணம். உங்கள் அடுத்த முயற்சிக்கு நாங்கள் நல்வாழ்த்துக்கள்" என்று சுப்மன் கில்லை குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் உடன் இணைந்த முதல்முறையே கோப்பை வெல்லும் அளவுக்கு அணியை கொண்டுச் சென்ற கில் அணியில் இருந்து வெளியேறுவது ஏன் என்பதற்கான காரணங்கள் சொல்லப்படவில்லை. மேலும், அடுத்ததாக அவர் எந்த அணியில் இணைய போகிறார் என்ற தகவலும் வெளியாகவில்லை. இதனால் ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரசிகர்கள், தங்கள் அணியில் இணைய வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
2018ல் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சுப்மன் கில் இதுவரை 74 போட்டிகளில் விளையாடியுள்ள 32.20 சராசரியுடன் மொத்தம் 1900 ரன்கள் எடுத்துள்ளார்.