தனது அதிரடி ஆட்ட அணுகுமுறைக்கு காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் தான் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். நடப்பு ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் மொத்தம் 624 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார் அவர். சசெக்ஸ் அணிக்காக இந்த தொடரில் அவர் விளையாடி இருந்தார். இங்கிலாந்தில் உள்ள முதல்-தர கவுன்டி கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெறும் தொடர் இது. இந்த தொடரில் 3 சதம் மற்றும் இரண்டு அரை சதம் பதிவு செய்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 111.62.
இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அதோடு இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார். இவரது பேட்டிங் மிகவும் நேர்த்தியாக இருக்கும். களத்தில் சாலிடாக நிலைத்து நின்று, நிதானமாக ஆடும் பேட்ஸ்மேனாக இவர் அறியப்படுகிறார்.
“நிச்சயம் எனது ஆட்டத்தின் மற்றொரு பக்கம் இது என சொல்லலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் விளையாடியது அற்புதமான ஆடுகளங்கள். நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவிக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடலாம். அதில் நான் கொஞ்சம் கவனம் செலுத்தி பயிற்சி எடுத்துக் கொண்டேன். 2021 சீசனில் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்ததை இதற்கு காரணம் என சொல்லலாம்.
அந்த சீசனில் நான் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அது எனக்குள் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த அணி வீரர்கள் போட்டிக்கு தயாராகும் முறையை கவனித்தேன். அப்போது நான் ஒரு முடிவு செய்தேன். அது எனது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் புதுப்பாய்ச்சலை ஏற்படுத்தியது. நான் சில ஷாட்களில் பயிற்சி மேற்கொண்டேன். அனைத்து ஷாட்களையும் சிறப்பாக விளையாடுவதாக நண்பர் ஒருவர் ஊக்கம் கொடுத்தார். பயிற்சியில் செய்ததை களத்திலும் செய்தேன்” என புஜாரா தெரிவித்துள்ளார்.