20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்த டென்னிஸ் ஆளுமையான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அடுத்த வாரம் 23-ம் தேதி தொடங்கும் லேவர் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஸ்டைலான ஆட்டத்தால் டென்னிஸ் மீது ரசிகர்களுக்கு காதலை வரவழைத்தவர் வலது முழங்கால் காயத்துக்காக மேற்கொண்ட அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகள் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக அவரால் பெரிதாக டென்னிஸில் பங்கேற்க முடியாமல் போனது. இறுதியாக அவர், 2021-ம் ஆண்டு விம்பிள்டன் காலிறுதியில் தோல்வியடைந்த பிறகு டென்னிஸ் களத்துக்கு திரும்பவில்லை. அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் போட்டிகளில் திறம்பட விளையாடுவதற்கான வலு கால்களுக்கு இல்லை என்பதை உணர்ந்த பெடரர், கடினமான ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். டென்னிஸில் அவர், படைத்த சாதனைகள் ஒரு பார்வை…
> 8 சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் 1981-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி பிறந்தார். 8 வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார்.
> 1993-94-ம் ஆண்டில் பாஸல் நகரில் நடைபெற்ற தொடரில் பெடரர், பந்துகளை எடுத்து கொடுக்கும் பால்பாயாக இருந்துள்ளார். இதே இடத்தில் அவர், 75 ஆட்டங்களில் விளையாடி 10 கோப்பைகளை வென்றார்.
> டென்னிஸ் வரலாற்றில் அதிக அளவு ரசிகர்கள் திரண்ட 2 ஆட்டங்களில் பெடரர் விளையாடி உள்ளார். 2020-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில் ரபேல் நடாலை எதிர்த்து பெடரர் விளையாடிய போட்டியை 51,954 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
> 10 விம்பிள்டன், அமெரிக்க ஓபன் உட்பட பெரிய அளவிலான போட்டிகளில் 2005 முதல் 2007 வரையிலான காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 10 முறை இறுதிப் போட்டியில் கால் பதித்திருந்தார்.
> 237 உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ரோஜர் பெடரர் முதலிடத்தில் 310 வாரங்கள் ஆதிக்கம் செலுத்தினார். இதில் 2004 பிப்ரவரி 2-ம் தேதியில் இருந்து 2008 ஆகஸ்ட் 18-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 237 வாரங்கள் தொடர்ச்சியாக முதலிடம் வகித்து சாதனை படைத்தார்.
> டென்னிஸ் தரவரிசையில் அதிக வயதில் முதலிடத்தை பிடித்த வீரர் என்ற சாதனையையும் பெடரர் நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை அவர், தனது 36-வது வயதில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி நிகழ்த்தியிருந்தார்.
> கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் 369 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளார். ஒபன் எராவில் இந்த வகையிலான வெற்றிகளை எந்த வீரரும் இதுவரை குவித்தது இல்லை.
> 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் பெடரர் நிகழ்த்தியிருந்தார். இதன் பின்னரே நடால் (22 கிராண்ட் ஸ்லாம்), ஜோகோவிச் (21 கிராண்ட் ஸ்லாம்) ஆகியோர் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களின் பட்டியலில் இணைந்தனர்.
> ஏடிபி டூர் போட்டிகளில் 1,251 வெற்றிகளை குவித்துள்ளார். இந்த வகை சாதனையில் ஜிம்மி கார்னர்ஸுக்கு (1,274) அடுத்த இடத்தில் உள்ளார்.
> ஏடிபி டூர் போட்டிகளில் 103 கோப்பைகளை வென்றுள்ளார் பெடரர். இந்த வகையிலும் ஜிம்மி கார்னர்ஸுக்கு (109) அடுத்த இடம் வகிக்கிறார்.
கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்
ஆஸ்திரேலிய ஓபன்: 2004, 2006, 2007, 2010, 2017, 2018
பிரெஞ்சு ஓபன்: 2009
விம்பிள்டன்: 2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017
அமெரிக்க ஓபன்: 2004, 2005, 2006, 2007, 2008
மாஸ்டர்ஸ் தொடர்: 28
ஏடிபி பைனல்ஸ்: 6
டேவிஸ் கோப்பை: 1
ஒலிம்பிக் தங்கம்: 1 (இரட்டையர் பிரிவு 2008)
பெடரரின் மனைவி பெயர் மிர்கா வவ்ரினெக். இவர்கள் தங்களது காதலை 2000-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது முத்தங்களை பரிமாறி வெளிப்படுத்தினர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ரோஜர் டெரர் உருவம் பொறித்த ஸ்டாம்ப் மற்றும் நாணயங்களை முறையே 2007 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டது. வாழும் காலத்தில் சுவிட்சர்லாந்தில் இந்த பெருமையை பெற்ற முதல் நபர் பெடரர்தான். மேலும் 2021-ம் ஆண்டு ‘பெடரர் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ரயில் இயக்கப்பட்டது.
2003-ல் ரோஜர் பெடரர் அறக்கட்டளையை தொடங்கினார். ரபேல் நடாலுடன் இணைந்து ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரணத்துக்கு 2,50,000 அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கினார். கரோனா தொற்றால் சுவிட்சர்லாந்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 1 மில்லியன் டாலர் வழங்கினார்.