டென்னிஸ் ஜாம்பவான், ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். லேவர் கோப்பை (Laver Cup) டென்னிஸ் அவரின் கடைசி தொடராக அமையவுள்ளது. கடந்த 1998ல் டென்னிஸ் உலகில் அறிமுகமான ரோஜர் ஃபெடரர், ஏடிபி (ATP) ரேங்கிங் தரவரிசையில் சுமார் 310 வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர். அதில் தொடர்ச்சியாக 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 6 ஆஸ்திரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்ச் ஓப்பன், 8 விம்பிள்டன், 5 யு.எஸ் ஓப்பன் என 20 முறை சாம்பியன் பட்டம் வென்றுவர். 20 கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற பெருமைக்குரியவர்.
இப்படியாக டென்னிஸ் உலகில் அவர் எட்டாத உயரங்களே இல்லை. இருந்தபோதும் காயங்கள் அவரை ரொம்பவே வருந்தச் செய்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்களும் ஆபரேஷன்களும் அவரை நோகடித்தன.
எனினும், ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டத்தைச் சேர்த்து டென்னிஸ் விளையாட்டின் மூலம் ஃபெடரர் சம்பாதித்த பரிசுத் தொகை $130.5 மில்லியன். இந்திய மதிப்பில் தோராயமாக 1041 கோடி ரூபாய். இந்த தொகையானது, சாம்பியன் பட்டங்கள் வென்றதன் மூலம் மட்டுமே. இதுதவிர, வணிக ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பரம் மூலம் ஃபெடரர் பெற்ற கூடுதல் வருமானங்கள் சேர்க்கப்படவில்லை.
என்றாலும், ஜோகோவிச், நடாலுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்திலேயே ஃபெடரர் உள்ளார். முதல் இடத்தில் 158.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஜோகோவிச்சும், இரண்டாம் இடத்தில் 131.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் நடாலும் உள்ளனர்.
ஃபோர்ப்ஸ் இதழ்படி, 90.7 மில்லியன் டாலர் இந்த ஆண்டு மட்டும் பிற வருமானங்கள் மூலம் ஃபெடரர் ஈட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.