பல கிரிக்கெட் ஆளுமைகள் ஆட்கொண்டுள்ள இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். அதோடு அதில் எத்தனை சர்வதேச ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் உள்ளன என்பதை சொல்ல முடியுமா? எனவும் புதிர் போட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து என எட்டு நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தொடரின் முதல் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்று வருகிறது.
இந்திய லெஜெண்ட்ஸ் அணியை சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். டி20 ஃபார்மெட்டில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரின் போட்டிக்காக பலநாட்டு வீரர்களும் ஒரே விமானத்தில் பயணித்துள்ளனர். அதனை போட்டோ பிடித்த சச்சின் அப்படியே அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தான் இந்த கேள்வியை கேட்டுள்ளார்.
சச்சின், யுவராஜ், ஷேன் வாட்சன், பிரெட் லீ, ஷேன் பாண்ட், வெட்டோரி என பல வீரர்கள் இந்த புகைப்படங்களில் காட்சி அளிக்கின்றனர். சச்சின் ஒருவரது சர்வதேச ரன்கள் மட்டுமே 34,357 என்ற எண்ணிக்கையை தொடும். அவர் 201 சர்வதேச விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
சச்சினின் கேள்விக்கு பலரும் தங்களது பதிலை அளித்து வருகின்றனர். நீங்களும் உங்களது பதிலை அளிக்கலாம்.