நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் அக்ரோபாட்டிக் பாணியில் காற்றில் அப்படியே பறந்து பந்தை வலைக்குள் தள்ளி பிரம்மிக்க வைத்துள்ளார் 22 வயதான கால்பந்தாட்ட வீரர் எர்லிங் ஹாலண்ட். அவர் நடப்பு சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வருகிறார். அவரது அபார கோல் பருஷியா டார்ட்மண்ட் அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற செய்துள்ளது.
மான்செஸ்டர் நகரில் உள்ள எதிஹாட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இரு அணிகளும் குரூப் ‘ஜி’-ல் இடம்பெற்றுள்ளன. இந்தப் போட்டி தொடங்கியது முதல் சுமார் 80 நிமிடங்கள் வரை டார்ட்மண்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால், கடைசி 10 நிமிடத்தில் லாவகமாக கோல் பதிவு செய்து ஆட்டத்தையும் வென்றது மான்செஸ்டர் சிட்டி.
மான்செஸ்டர் அணியின் வீரர் கேன்சலோ பந்தை கிராஸ் செய்ய, அதை அப்படியே காற்றில் பறந்து, தனது பின்பக்க குதிகால் மூலம் பந்தை தட்டி கோலாக மாற்றி இருந்தார் ஹாலண்ட். அவரது இந்த கோல் டச்சு நாட்டு வீரர் குரூயிஃப் மற்றும் ஸ்வீடன் வீரர் ஸ்லாடன் இப்ராஹிமூவிச் போன்ற வீரர்களின் ஆட்டத்தை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
நடப்பு சீசனில் ஹாலண்ட் கோல் மழை பொழிந்து வருகிறார். இதுவரையில் அவர் விளையாடி உள்ள 21 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 26 கோல்களை பதிவு செய்துள்ளார். சராசரியாக 62 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர் கோல் பதிவு செய்து வருகிறார்.