விளையாட்டு

பாகிஸ்தான் போட்டியின்போது இந்திய தேசியக் கொடியை அசைத்த அப்ரிடி மகள் - காரணம் என்ன?

செய்திப்பிரிவு

லாகூர்: நடந்து முடிந்த ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது தனது மகள் இந்திய தேசியக் கொடியை பிடித்தார் என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை டி20 தொடரில் கடந்த வாரம் நடந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. சூப்பர்-4 சுற்றில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 182 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. அந்த அணிக்கு முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். இந்தப் போட்டியின்போது தான் தனது மகள் இந்திய தேசியக் கொடியை அசைத்ததாக பேசியுள்ளார் ஷாஹித் அப்ரிடி.

பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பேசும்போது இதை வெளிப்படுத்திய அப்ரிடி அதற்கான காரணத்தையும் விளக்கினார். அதில், “ஸ்டேடியத்தில் 10% பாகிஸ்தான் ரசிகர்கள் இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் இந்திய ரசிகர்கள் என்றும் என் மனைவி என்னிடம் கூறினார். அங்கு பாகிஸ்தான் கொடிகள் கிடைக்கவில்லை, அதனால் எனது இளைய மகள் இந்தியக் கொடியை அசைத்துக்கொண்டிருந்தார். நான் அங்கு இல்லை. எனினும் அந்த வீடியோ எனக்கு கிடைத்தது. ஆன்லைனில் பகிரலாமா வேண்டாமா என்பது தெரியாததால் அதை வெளியிடவில்லை" என்று தெரிவித்தார்.

அப்ரிடி மகளின் இந்த செயல் இந்திய ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு சென்றிருந்த அப்ரிடி, அங்கு இந்திய ரசிகர்களை சந்திக்கும்போது இந்திய தேசியக்கொடியை பிடித்து போஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT