விளையாட்டு

பந்து வீசாமல் ரன் அவுட் செய்வதற்கு முன் எச்சரிக்கை செய்வது முட்டாள் தனம் - இயன் சாப்பல்

செய்திப்பிரிவு

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை பந்து வீசாமலேயே ரன் அவுட் செய்தது குறித்து இயன் சாப்பல் காட்டமாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் இது குறித்து எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:

நிறைய பேட்ஸ்மென்கள் பந்து வீசுவதற்கு முன்பே ரன்னர் முனையிலிருந்து கிரீஸை விட்டு சில அடி தூரம் நகர்ந்து செல்வது தொடர்ந்து நடந்து வரும் ஏமாற்று வேலையாகும். இதற்கு ஒரு பந்து வீச்சாளர் அவரை எச்சரிக்கை செய்து விட்டு பிறகு ரன் அவுட் செய்ய வேண்டிய தேவையில்லை.

ஒரு பேட்ஸ்மெனை ஸ்டம்பிங் செய்யும் முன் எச்சரிக்கை அளிக்கிறோமா? அது போலவேதான் இதுவும். 2011ஆம் ஆண்டு டிரெண்ட் பிரிட்ஜில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் இயன் பெல் தேநீர் இடைவேளைக்காக கிரீஸை விட்டுப் புறப்பட்டார். அப்போது பந்து டெட் ஆகவில்லை. ரன் அவுட் செய்யப்பட்டார்.

பிறகு அவர் திரும்பவும் பேட் செய்ய அழைக்கப்பட்டார். மாறாக தோனி இங்கிலாந்து கேப்டனிடம் இவ்வாறு கூறியிருக்கவேண்டும், “இயன் பெல்லிடம் அவரது விக்கெட்டை இனிமேலாவது பத்திரமாகப் பார்த்துக் கொள்ளக் கூறுங்கள், மேலும் நேரம் கிடைக்கும்போது கிரிக்கெட் விதிகளை அவரைப் படிக்கச் செய்யுங்கள்”. ஆனால் தோனி அவரை மீண்டும் பேட் செய்ய அழைத்தார்.

பந்து வீசும் முன்பே கிரீஸை விட்டு சில அடிதூரம் நகர்வது டெஸ்ட் ஆகட்டும் ஒருநாள் கிரிக்கெட் ஆகட்டும் பேட்டிங் அணிக்கு சில பெரிய அனுகூலங்களை கொடுத்து விடுகிறது. எதிர்முனையில் இருக்கும் டெய்ல் எண்டர் முக்கிய பேட்ஸ்மெனுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கும் விதமாக கிரீஸை விட்டு முன்னமேயே வந்து இரண்டு ரன்களை எடுப்பது ஆட்டத்தின் போக்கை மாற்றி விடும். ஆகவே எச்சரிக்கை செய்யாமல் ரன் அவுட் செய்வதே சரி.

இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்.

SCROLL FOR NEXT