தன்னைப் பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் கடுமையாக விமர்சனம் செய்து வருவது பற்றி இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் வெறுப்படைந்துள்ளார்.
குக் கேப்டன்சி எப்போதுமே 'மிகவும் அறுவை' மற்றும் 'எதிர்மறை அணுகுமுறை' என்று கடும் விமர்சனம் செய்து வருவதோடு, அவரை மாற்ற வேண்டும் என்றும் கிரேம் ஸ்வான், அல்லது பீட்டர்சனைக் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்பு கூறியிருந்தார்.
சமீபமாக குக் மாற வேண்டும் என்றும் அணியின் விக்கெட் கீப்பர் மேட் பிரையரைத் தேர்வு செய்தது தவறு என்றும் தனது பத்தி ஒன்றில் எழுதினார் ஷேன் வார்ன்.
இதனையடுத்து அலிஸ்டர் குக் வெறுப்படைந்துள்ளார். அவர் பிபிசி நேர்காணலில் கூறும்போது "இத்தகைய விமர்சனத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும். நான் இங்கிலாந்து கேப்டனாக இருக்கிறேன் அதற்காகவே என் மீது தாறுமாறாக விமர்சனம் வைக்கப்படுகிறது.
தோற்கும்போது விமர்சனங்கள் வைப்பது சரி. ஆனால் ஒரு கேப்டனாக இங்கிலாந்தை வெற்றிக்கும் அழைத்துச் சென்றிருக்கிறேன். ஒருநாள் போட்டிகளில் வேறு எந்த இங்கிலாந்து கேப்டனை விடவும் எனது கேப்டன்சியில் வெற்றிகள் அதிகம்.
ஒரு ஆஷஸ் தொடர் வென்றேன், இந்தியாவில் வெற்றி பெற்றேன், எனவே 3 ஆண்டுகளாக என்னை இப்படி விமர்சனம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை, இதனை நான் நேர்மையாகக் கூறுகிறேன்.
இது தனிநபர் தாக்குதலாகவே படுகிறது. இத்தகைய விமர்சனங்கள் எந்த வித மாற்றத்தையும் கொண்டு வராது" என்றார்.
வார்ன் எப்போதுமே ஒரு ஆஸ்திரேலியராகவே இங்கிலாந்து அணியைப் பார்க்கிறார், களத்தில் இங்கிலாந்து வீரர்களின் மனநிலையை பாதிக்குமாறு செய்வதில் அவர் வல்லவர், இப்போது வர்ணனையிலும் எழுத்திலும் அதே வேலையைச் செய்கிறார் என்று இங்கிலாந்தில் குக் தரப்பு ஆதரவாளர்கள் கருதுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.