விளையாட்டு

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

செய்திப்பிரிவு

கெய்ர்ன்ஸ்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெய்ர்ன்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 94 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் சேர்த்தார்.

மிட்செல் ஸ்டார்க் 38, கிளென் மேக்ஸ்வெல் 25, ஜோஸ் ஹேசில்வுட் 23, ஆடம் ஸம்பா 16, அலெக்ஸ் காரே 12 ரன்கள் எடுத்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்தது. அந்தசூழ்நிலையில் ஸ்டீவ்ஸ்மித், பின்கள வீரர்களுடன் இணைந்து நிதானமாக விளையாடியதால் ஆஸ்திரேலிய அணியால் 195 ரன்களை எட்ட முடிந்திருந்தது. நியூஸிலாந்து அணி சார்பில் டிரெண்ட் போல்ட் 4, மேட் ஹென்றி 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

196 ரன்கள் இலக்குடன் பேட் செய்தநியூஸிலாந்து அணியானது ஆடம் ஸம்பாவின் சுழற்பந்து வீச்சில் சிக்கி 33 ஓவர்களில் 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 17, மிட்செல் சாண்ட்னர் 16, பிரேஸ்வெல் 12, டேரில் மிட்செல் 10 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணிசார்பில் ஆடம் ஸம்பா 5 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க், சீன் அபோட் ஆகியோர் தலா2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி ஆட்டம் நாளை மறுதினம் (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT