துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் 1019 நாளுக்கு சதம் விளாசினார் இந்திய அணியின் விராட் கோலி.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பிலிருந்து இந்திய அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது. சம்பிரதாய மோதலாக இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ரோஹித்திற்கு பதிலாக கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற ஆப்கன் கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணியின் ஓப்பனர்களாக ராகுல் உடன் கோலி களமிறங்கினார்.
தங்கள் பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய கேஎல் ராகுல் மற்றும் கோலி இருவருமே ஆரம்பத்தில் ஸ்லோ பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், போக போக அதிரடி காட்டினர். ஆப்கன் பவுலர் ஃபருக்கி ஓவரில் பவுண்டரிகளை விளாசி இருவரும் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்த, அதிலிருந்து இருவரின் அதிரடியும் அதிகமானது. இவர்கள் கூட்டணி நாலாபுறமும் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி ஆப்கன் பவுலர்களை சிதறடித்தனர்.
இருவரும் அரைசதம் கடந்த நிலையில், 13வது ஓவரிலேயே இவர்கள் கூட்டணியை பிரிக்க முடிந்தது. 62 ரன்கள் குவித்த ராகுல் முதல் விக்கெட்டாக வெளியேறிய, அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் ஒரு சிக்ஸரை மட்டும் விளாசி அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். என்றாலும், ரிஷப் பந்த் உடன் இணைந்து விராட் கோலி தனது அதிரடியை தொடர்ந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த நிகழ்வும் இன்று நடந்தது.
1019 நாள்களுக்குப் பிறகு சர்வதேச களத்தில் தனது சதத்தை பதிவு செய்தார். கோலியின் கிரிக்கெட் வரலாற்றில் இது 71வது சதம் ஆகும். அதேநேரம், டி20 கிரிக்கெட்டில் இதுவே விராட் கோலிக்கு முதல் சதம் ஆகும். சதம் எடுத்த பின்பும் அதிரடியாக ஆடிய கோலி, கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்து மொத்தம் 61 பந்துகளை சந்தித்து 122 ரன்களை குவித்தார். அதேநேரம், 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது இந்திய அணி.
மெகா இலக்கை துரத்திய ஆப்கன் அணிக்கு ஹஜ்ரத்துல்லாஹ் ஜசைல் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் ஓப்பனிங் செய்தனர். முதல் ஓவரின் 4வது பந்திலேயே ஜசைல்லை புவனேஷ்வர் குமார் வெளியேற்றி ஆப்கன் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதற்கடுத்த பந்தில் குர்பாஸையும் அவுட் ஆக்க, முதல் ஓவர் முடிவிலேயே ஓப்பனிங்கின் இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது ஆப்கன். புவனேஷ்வர் குமார் தனது அட்டாக்கிங் பவுலிங்கை கைவிடவில்லை. இதனால், ஆப்கன் வீரர்கள் ஓவ்வொருவராக விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஒன் டவுன் வீரராக இறங்கிய இப்ராஹிம் ஜர்தான் தான் தவிர மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இப்ராஹிம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 64 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார். இதன்மூலம், 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.