அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் அரை இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா முன்னேறியுள்ளார்.
அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச் சுற்றில் 12-ம் நிலை வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான கோகோ கவூப், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா ஆகியோர் விளையாடினர்.
இதில் கரோலின் கார்சியா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் கோகோ கவூப்பை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். 28 வயதான கார்சியா, முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்சியா தனது அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையும், துனிசியா வீராங்கனையுமான ஒன்ஸ் ஜபேரை எதிர்த்து விளையாடுவார்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் ஜபேர் 6-4, 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியா வீராங்கனை அஜ்லா டாம்லி ஜோனோ விச்சை வீழ்த்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச் சுற்றில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டும், இத்தாலி வீரர் மேட்டோ பெரிடினியும் மோதினர். இதில் கேஸ்பர் ரூட் 6-1, 6-4, 7-6(7-4) என்ற நேர் செட் கணக்கில், பெரிடினியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டார்.
23 வயதான கேஸ்பர் ரூட் அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் கேரன் காசனோவ் 7-5, 4-6, 7-5, 6-7 (3), 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸை தோற்கடித்தார்.