புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
35 வயதான சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனியுடன் இணைந்து கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரெய்னா தனது ட்விட்டர் பிதிவில், “நாட்டுக்காகவும், உத்தரப்பிரதேச அணிக்காகவும் விளையாடியது பெருமையாக உள்ளது.
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். பிசிசிஐ, உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம், சிஎஸ்கே நிர்வாகம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இனிமேல் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ரெய்னா விளையாடமாட்டார். அதேவேளையில் உலகின் மற்ற பகுதிகளில் நடைபெறும் தொழில்முறை ரீதியிலான டி 20 லீக்குகளில் பங்கேற்க முடியும். இதை கருத்தில் கொண்டே ரெய்னா ஓய்வு முடிவை அறிவித்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
ரெய்னா கடைசியாக 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக களமிறங்கியிருந்தார்.