ரயிலுக்காக காத்திருக்கும் ஸ்ரீநாத் 
விளையாட்டு

ரயிலுக்காக காத்திருக்கும் ஸ்ரீநாத்... வைரலான பழைய புகைப்படம்!

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீநாத்தின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. குறிப்பாக, அவரது எளிமைக்காக அந்தப் புகைப்படம் நெட்டிசன்களால் கொண்டாடப்படுகிறது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் மறக்க முடியாத முகமாக அறியப்படுகிறார் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீநாத். 2003-ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீநாத் தற்போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நடுவராக பணி செய்து வருகிறார்.

இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ரயிலுக்காக காத்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அந்தப் படத்தை அஷு சிங் என்ற லிங்க்கிடு இன் (LinkedIn) பயனர் பகிர்ந்திருக்கிறார். அதில், “இது ஜவகல் ஸ்ரீநாத்... மைசூர் ரயில் நிலையத்தில் தன்னுடைய ரயிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் நினைப்பது உண்மைதான். இந்த சிறந்த பந்துவீச்சாளர் எளிமையானவராகவும் இருக்கிறார். நமது தலைமுறையின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர்” என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. நெட்டிசன்கள் ஸ்ரீநாத்தின் எளிமையை பாராட்டி இப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 236 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஸ்ரீநாத், 229 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 315 விக்கெட்களையும் விழ்த்தியுள்ளார்.

SCROLL FOR NEXT