ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இந்தத் தோல்வியால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறது இந்திய அணி.பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சில் இந்தியஅணி தேக்கநிலையை சந்தித்தது. லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட புவனேஷ்வர்குமார் கூட தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார்.
அதேவேளையில் ஹர்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல் ஆகியோர் அதிக ரன்களை வாரி வழங்கினர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அக்சர்படேல், அவேஷ் கான்ஆகியோர் களமிறக்கப்படக்கூடும்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக டாப் ஆர்டர் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர் சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
இலங்கை அணியை பொறுத்தவரையில் லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்த போதிலும் அடுத்து வங்கதேச அணிக்கு எதிராகவும், சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் பெரிய இலக்கை வெற்றிகரமாக துரத்தி அசத்தியிருந்தது.
இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெறும்பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும். பேட்டிங்கில் சாரித் அசலங்க, தசன் ஷனகா, குஷால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலக, பனுகா ராஜபக்ச ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
பாகிஸ்தானிடம் தோல்வி ஏன்? - ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, ‘‘181 ரன்கள் சிறப்பானது என்றே கருதினேன்.
இதுபோன்ற ஒரு இலக்கை கொடுத்தாலும் எந்த வகையிலான மனநிலையை கொண்டிருக்க வேண்டும் என்பதை இந்த ஆட்டத்தின் வாயிலாக கற்றுக்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் அணியினர் எங்களைவிட சிறப்பாக விளையாடினார்கள். ரிஸ்வான், நவாஸ் ஆகியோர் இடையிலான பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்த போதிலும் நாங்கள் நிதானமாக இருந்தோம். ஆனால் இவர்களது பார்ட்னர்ஷிப் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் நிலைத்துவிட்டது” என்றார்.