வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்தியா, நியூஸிலாந்து அணிகள் விளையாடும் முதல் ஒருநாள் போட்டியில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுமார் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பிய ரெய்னாவுக்கு இதனால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருக்குப் பதிலாக புதிய வீரரைச் சேர்க்கவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
வரும் 16-ம் தேதி தரம்சலாவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை 3-0 என்று ஒயிட்வாஷ் செய்ததால் ஒருநாள் போட்டிகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே முதல் 3 போட்டிகளுக்கு முக்கிய வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் நடுக்கள அதிரடி வீர்ர் ரெய்னா விளையாட முடியாமல் போயுள்ளது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்திற்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் உ.பி. அணிக்கு தலைமை வகித்தாலும் ரெய்னா பேட்டிங்கில் களமிறங்கவில்லை. இதனால் மத்தியப் பிரதேசத்திடம் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரப்பிரதேச அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.