நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் கேட்ச் ஒன்றை நழுவவிட்டார் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். இந்த அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவியது. அதன் காரணமாக அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லியுள்ளார் பஞ்சாப் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் குர்மீத் சிங்.
23 வயதான அவர் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பிஷ்னோய் வீசிய 18-வது ஓவரின் மூன்றாவது பந்தை பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி எதிர்கொண்டார். பந்து டாப் எட்ஜ் ஆகி அர்ஷ்தீப் வசம் தஞ்சம் அடைந்தது. ஆனால் அந்த வாய்ப்பை நழுவவிட்டார் அவர். அப்போது பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 15 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது முதலே அவர் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
அவருக்கு காலிஸ்தான் தேசியவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அவர் மீது வெறுப்புணர்வு வெளிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவரது தாயாரிடம் பஞ்சாப் மாநில அமைச்சர் குர்மீத் தொலைபேசியில் பேசியுள்ளார்.
“ஒட்டுமொத்த நாடும் அவருடன் உள்ளது. இந்திய அணி நாடு திரும்பும் போது உங்களுடன் இணைந்து அவர்களை ஆரவாரமாக வரவேற்க நானும் வருவேன். நிச்சயம் அவர் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிறகே நாடு திரும்புவார்” என குர்மீத் தெரிவித்துள்ளார்.
அர்ஷ்தீப்புக்கு இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். விராட் கோலியும் தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.