துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதின. இதில் 184 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை 19.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. வங்கதேச அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. இதனால் தொடரில் இருந்து வெளியேறியது.
இலங்கைக்கு எதிராக வங்கதேச அணி 17 ரன்களை உதிரிகளாக வழங்கியிருந்தது. இதில் 4 நோ-பால்கள் அடங்கும். முக்கியமாக ஆட்டத்தின் 20-வது ஓவரில் இலங்கை அணிக்கு கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மெஹிதி ஹசன் நோ-பால் வீசினார். இதன் வாயிலாக 3 ரன்களை எளிதாக பெற்று வெற்றியை வசப்படுத்திய இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்ஹசன் கூறும்போது, “ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் நாங்கள் சிறப்பாக பந்துவீசவில்லை. பேட்டிங்கை பொறுத்தவரையில் எதிர்பார்த்ததை விட நாங்கள் கூடுதலாக 10 முதல் 15 ரன்களை எடுத்தோம். மெஹிதி ஹசன் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசுவது குற்றம். அதிக அளவிலான நோ-பால் மற்றும் அகலப் பந்துகளை வீசிவிட்டோம். நாங்கள் அழுத்தத்தில் இருந்ததாக நினைக்கிறேன். உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். படிப்படியாக முன்னேற்றம் காண விரும்புகிறோம்” என்றார்.
இன்றைய ஆட்டம் (சூப்பர் 4 சுற்று)
இலங்கை – ஆப்கானிஸ்தான்
நேரம்: இரவு 7.30, நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்