மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 9-வது சீசன் வரும் அக்டோபர் 7-ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது. 11 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரானது 117 ஆட்டங்களுடன் சுமார் 5 மாதங்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் மற்றஅணிகளுடன் தலா இரு முறை மோதும். அந்தவகையில் ஒவ்வொரு அணியும் 20 ஆட்டங்களில் மோதுகின்றன. தொடக்க நாளில் கேரளா – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்சி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 10-ம் தேதி ஏடிகே மோகன் பகானுடன் மோதுகிறது.
லீக் ஆட்டங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ல் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் பிளேஆஃப், அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இம்முறை பிளே ஆஃப் சுற்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. லீக் சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும்.3 முதல் 6-வது இடத்தை பிடிக்கும் 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றில் மோதும். இதில் இரு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
லீக் சுற்றில் 3-வது மற்றும் 6-வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றின் முதல் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும். 2-வது எலிமினேட்டர் ஆட்டத்தில் லீக் சுற்றில் 4-வது இடம் பிடித்த அணி, 5-வது இடத்தை பிடித்த அணியை எதிர்கொள்ளும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் இரு அணிகள் லீக் சுற்றில் முதல் இரு இடங்களை பிடித்த அணிகளுடன் அரை இறுதியில் பலப்பரீட்சை நடத்தும். அரை இறுதி இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.