விளையாட்டு

ஆசிய கோப்பை | கோலி - சூர்யகுமார் இணை அதிரடி; ஹாங்காங் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

செய்திப்பிரிவு

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி அரைசதமடித்து மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்பினார். அவருடன் சூர்யகுமார் யாதவும் அதிரடி காட்டினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஹாங்காங்குடன் மோதி வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் இணை துவக்கம் கொடுத்தது. ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா அதே வேகத்தில் வெளியேறினார். அவருக்கு அடுத்தாக கோலியுடன் கூட்டணியமைத்த கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பெரிய ஸ்கோரை எட்டவில்லை. ரோஹித் 21 ரன்களிலும், கே.எல்.ராகுல் 36 ரன்களிலும் அவுட்டான நிலையில், ஆட்டத்தை விராட் கோலியும், சூர்யகுமார் யாதவும் கைப்பற்றினர்.

இருவரும் இணைந்து ஹாங்காங்க் பவுலர்களின் பந்துவீச்சை நாலுபுறமும் விரட்டி அடித்தனர். அந்த வகையில் நீண்ட நாட்களாக ஃபார்முக்கு திரும்பாமல் விமர்சனங்களை எதிர்கொண்ட விராட் கோலி தற்போது மீண்டும் அரை சதத்தை அடித்து அதிரடி காட்டினார். அதேபோல சூர்ய குமார் யாதவும் அதிகவேகமாக அரைசதத்தை அடித்தவர், கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார்.

இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. இதில் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 68 ரன்களையும், விராட் கோலி 44 பந்துகளில் 59 ரன்களையும் எடுத்தனர்.

SCROLL FOR NEXT