டென்மார்க் ஓபன் பாட்மிண்டனில் ஆடவிருக்கும் ஒலிம்பிக் வெள்ளி வீராங்கனை பி.வி.சிந்து அழுத்தங்களின் சுமையின்றி ஆடப்போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் புலெல்ல கோபிசந்துடன் கலந்து கொண்ட சிந்து கூறியதாவது:
ஒலிம்பிக்கிற்குப் பிறகே என் வாழ்க்கை நிரம்ப மாறிவிட்டது. வெள்ளிப்பதக்கம் என்னை மாற்றிவிட்டது. நான் ஏற்கெனவே டென்மார்க் ஓபன், பிரெஞ்ச் ஓபன் போட்டிகளுக்கான பயிற்சிகளைத் தொடங்கி விட்டேன். நாங்கள் நாளை (சனிக்கிழமை) புறப்படுகிறோம். எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் நம்பிக்கையுடன் செல்கிறேன்.
ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்திற்குப் பிறகே எனது நம்பிக்கை கூடியுள்ளது, இதே தன்னம்பிக்கையுடன் மேலும் முன்னேற விரும்புகிறேன். இப்போதிலிருந்தே பொறுப்புகள் மிகவும் அதிகமாகியுள்ளன. அனைவரது பார்வையும் என் ஆட்டத்தின் மீது கவனக்குவிப்பு பெறும் என்பதை அறிவேன். ஆனால் அதனை சுமையாகக் கருத மாட்டேன். களத்தில் இறங்கி 100% ஆட வேண்டும் என்பதே எண்ணம்.
வரும் தொடர்களுக்கு தயார்படுத்தியுள்ளேன். தயாரிப்புகளும் நல்ல முறையில் அமைந்தது. பதக்கம் பற்றிய பெருமிதம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்பதை அறிவேன்” என்றார்.
திரிபுரா ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை கர்மாகர் தனக்கு பரிசளிக்கப்பட்ட பி.எம்.டபிள்யூ காரை திருப்பி அளிக்கப்போவது குறித்து பி.வி.சிந்து கூறும்போது, “எனக்கு அது பிரச்சினையல்ல. ஆனால் திபாவுக்கு அகர்தலாவின் குறுகிய சாலைகள் பிரச்சினை. மேலும் பராமரிப்பு சுமை அவரால் நிர்வகிக்க முடியவில்லை அதனால் திருப்பி அளிக்க முடிவெடுத்துள்ளார்.
நான் ஏற்கெனவே காரை ஓட்டினேன், அது ஒரு அருமையான அனுபவம்” என்றார் பி.வி.சிந்து.