விளையாட்டு

இளைஞர்களின் உதவியால் பாரா ஒலிம்பிக் செல்லும் 5 மாற்றுத்திறனாளிகள்

கே.கே.மகேஷ்

பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும், நிதியில்லாமல் தவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மதுரை இளைஞர்கள் சுமார் ரூ.6 லட்சம் திரட்டிக் கொடுத்து அவர்கள் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான துனிஷியா வில் வருகிற 12-ம் தேதி முதல் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கவுள்ள 62 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் எஸ்.குருநாதன், கே.ஜெ.ஆண்டனி, பி.படைத் தலைவன், ராசாத்தி, எம்.டி.பூங் கொடி ஆகிய 5 பேரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அரசு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யாததால், இவர்களை துனிஷியாவுக்கு அழைத்துச் செல்லும் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியானது, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செலவுகளும் வீரர்களின் சொந்தப் பொறுப்பு என்று அறிவித்துவிட்டது. போட்டிக்கான நுழைவுக்கட்டணம், விமானக் கட்டணம் உள்பட ஒவ்வொரு வீரரும் தலா ரூ.1.39 லட்சம் செலுத்தினால் தான் போட்டியில் பங்கேற்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போன்றோர் இணைந்து இந்த வீரர்களுக்காக ‘யூத் லீட் இந்தியா’ என்ற அமைப்பைத் தொடங்கினர். அதன் மூலம் பொது இடங்களில் நடன நிகழ்ச்சி நடத்தியும், ஃபேஸ்புக் வாயிலாக விளம்பரப்படுத்தியும் நிதி திரட்டினர். சுமார் 40 நாள்களாக இவர்கள் எடுத்துக்கொண்ட கடும் முயற்சி காரணமாக தற்போது, மாற்றுத்திறனாளிகளை போட்டிக்கு அனுப்புவதற்கு தேவையான நிதி கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர்கள் 5 பேரும் துனிஷியா புறப்படவுள்ளனர். இவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மிகுந்த நெகிழ்ச்சியோடு நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரர்களை பலர் வாழ்த்திப் பேசினர். சில இளைஞர்கள் அவர்களுக்கு சீருடை, ஷூ போன்றவற்றை வழங்கினர். 7-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தன் கையில் இருந்த 5 ரூபாய் நாணயத்தை அவர்களுக்குக் கொடுத்து வழியனுப்பினார்.

முதல்வர் கவனிப்பாரா?

இவர்களை பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார்படுத் தியவர் சர்வதேசப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற ஜெ.ரஞ்சித். இவரும் ஒரு மாற்றுத் திறனாளி. அவர் கூறுகையில், எந்த உதவியும் இல்லாமல் மாற்றுத் திறனாளிகள் பல சாதனை களைப் படைத்துவருகிறோம்.

ஆனால், தகுந்த அங்கீகாரம் இல்லாததால், பலர் சோர் வடைந்து விடுகின்றனர். எனவே, மற்ற வீரர்களுக்கு வழங்குகிற சலுகைகளை சாதிக்கிற மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்க முதல்வர் முன்வர வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT