விளையாட்டு

இந்திய விளையாட்டுத் துறையின் ஏற்றத்துக்கு ஊக்கம் தரும் லீக் தொடர்கள் | National Sports Day

Ellusamy Karthik

கடந்த 2012 முதல் இந்தியாவில் ‘தேசிய விளையாட்டு நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இந்திய நாட்டுக்கு சர்வதேச அளவில் பெருமை சேர்த்து வரும் ஆடுகள ஹீரோக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு விருது வழங்கி ஊக்கம் கொடுப்பது, விளையாட்டு சார்ந்த திட்டங்களை இந்த சிறப்பு நாளில் அறிமுகம் செய்வது போன்றவற்றை இந்திய அரசு முன்னெடுத்து வருகிறது. கடந்த 2018 வாக்கில் இதே நாளில்தான் ‘கேலோ இந்தியா’ (Khelo India) குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.

யார் இந்த தயான் சந்த்? - கடந்த 1905, ஆகஸ்ட் 29 அன்று உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் பிறந்தவர். பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா இருந்த போதும் ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்திய அசாத்திய வீரர். 1928, 1932, 1936 ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி ஹாட்ரிக் தங்கம் வெல்ல உதவியவர். பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டே இரவு நேரத்தில் நிலவு வெளிச்சத்தில் ஹாக்கி பயிற்சி மேற்கொண்டவர். அதனால் இவரது இயற்பெயரான தயான் சிங் என்பது தயான் சந்த் என மாறியுள்ளது. நிலவை இந்தி மொழியில் சந்த் என சொல்வார்களாம். 1926 முதல் 1949 வரையில் இந்திய ஹாக்கி அணியில் இவர் விளையாடி உள்ளார். தேசத்திற்காக 185 போட்டிகளில் விளையாடி 570 கோல்களை பதிவு செய்துள்ளார்.

தேசிய விளையாட்டு விருதுகள்: மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா (ராஜீவ் காந்தி கேல் ரத்னா என முன்னர் அறியப்பட்டது) அர்ஜுனா விருது, தயான் சந்த் விருது, துரோணாச்சார்யா விருது போன்ற விருதுகள் இந்த நாளில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

முன்னேற்ற பாதையில் இந்திய விளையாட்டு: இந்திய விளையாட்டு வீரர்கள் உலக அளவில் தங்கள் தடங்களை ஆழமாக பதித்து வருகின்றனர். ஹாக்கி, கிரிக்கெட் மட்டுமல்லாது கடந்த ஒரு தசாப்தத்தில் (Decade) பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் சாதித்து வருகின்றனர்.

குத்துச்சண்டை, வாள்வீச்சு, வில்வித்தை, வாலிபால், மல்யுத்தம், மகளிர் கிரிக்கெட், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், தடகளம், ஜூடோ, ஸ்குவாஷ், சதுரங்கம், நீச்சல், கோல்ஃப், லான் பவுல்ஸ் என பல விளையாட்டுகளில் இந்தியா சாதித்துள்ளது.

குறிப்பாக அரசு விளையாட்டு சார்ந்த கட்டமைப்பு வசதிகளை நாட்டில் ஏற்படுத்திக் கொடுத்தது, மேம்படுத்தியது மற்றும் சிறப்பு திட்டங்களை முன்னெடுத்ததன் பலனாகவே இது அமைந்துள்ளது. ‘டார்கெட் ஒலிம்பிக் போடியம்’ திட்டத்தின் மூலம் திறன் வாய்ந்த வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறப்பான பயிற்சி, டயட் என அனைத்தையும் அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை பணிக்கு அமர்த்தி வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இன்ஸ்பயர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (IIS): அரசின் முயற்சி மட்டுமல்லாது தனியார் அமைப்புகளின் முயற்சியும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. அதில் ஒன்றுதான் இன்ஸ்பயர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ். ஜே.எஸ்.டபிள்யூ நிர்வாகம் இந்தப் பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறது. இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து வரும் தனியார் பயிற்சி மையம் இது. இதற்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரமும் வழங்கியுள்ளது. தடகளம், குத்துச்சண்டை, ஜூடோ, நீச்சல் மற்றும் மல்யுத்த விளையாட்டு வீரர்களுக்கு உதவி வருகிறது ஐஐஎஸ்.

ஊக்கம் கொடுக்கும் லீக் தொடர்கள்: வணிக நோக்கத்தில் இந்தியாவில் பல்வேறு விளையாட்டுகளுக்கு லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இது கிராஸ் ரூட் லெவலில் இருக்கும் தனித்திறன் மிக்க வீரர்களை அடையாளம் காணவும் உதவுகிறது.

கிரிக்கெட், கால்பந்து, கபடி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், கோ-கோ போன்ற விளையாட்டுகளுக்கு இந்தியாவில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சில விளையாட்டுக்கு மாநில அளவிலும் லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தங்கள் திறனை நிரூபித்த வீரர்கள் நாட்டுக்காக சர்வதேச களத்திலும் களம் கண்டு வருகின்றனர்.

தமிழக அரசும் விளையாட்டு துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளையும், அது தொடர்பான திட்டங்களையும் அறிவித்துள்ளது.

இவை அனைத்தும் இந்திய விளையாட்டின் வளர்ச்சி சார்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளவை. இதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் கொடி இன்னும் உயரப் பறக்கும் என நம்புவோம்.

இன்று - ஆகஸ்ட் 29: தேசிய விளையாட்டு தினம்

SCROLL FOR NEXT