விளையாட்டு

கபடி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை

ஏஎஃப்பி

12 நாடுகள் பங்கேற்கும் கபடி உலகக் கோப்பை போட்டிகள் இந்த வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இருநாட்டு உறவுகளில் பதற்றம் நீடிப்பதால் பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா அணிகளும் ஈரான் அணி புதிய அணியான அமெரிக்க அணியுடனும் மோதுகின்றன.

பாகிஸ்தான் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது குறித்து சர்வதேச கபடி கூட்டமைப்பு தலைவர் தியோராஜ் சதுர்வேதி கூறும்போது, “இரண்டு நாடுகளுக்கு இடையேயும் பதற்றம் தொடரும் நிலையில் பாகிஸ்தானை அனுமதிப்பது சரியாகாது. பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு இது உகந்த நேரமல்ல.

சர்வதேச கபடி கூட்டமைப்பின் மதிப்பு மிக்க உறுப்பினர் பாகிஸ்தான், இருந்தாலும் இப்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் இருநாட்டு நல்லுறவுகள் என்ற நலம் கருதி கபடி உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்வது சரியாக இருக்காது என்று நினைத்தோம்” என்றார்.

ஆனால் பாகிஸ்தானோ, இருநாடுகளுக்கு இடையேயும் பதற்றம் இருந்தால், பாதுகாப்பு கவலைகள் இருந்தால் இருநாட்டு அணிகளையும்தாம் தடை செய்ய வேண்டும் என்று சர்வதேச கபடி கூட்டமைப்பை கேள்வி கேட்டுள்ளது.

பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு செயலர் ரானா முகமது சர்வார் கூறும்போது, “இந்த விவகாரத்தை விவாதிக்க கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளோம். பாகிஸ்தான் இல்லாமல் கபடி உலகக்கோப்பை போட்டிகள் உலகக்கோப்பையே அல்ல.

பிரேசில் இல்லாத கால்பந்து உலகக்கோப்பை போன்றது இது” என்றார்.

பாகிஸ்தான் கேப்டன் நசிர் அலி கூறும்போது, மே மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற 6 நாடுகள் பங்கேற்ற கபடி கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றதாகவும் இம்முறையும் கோப்பையை வெல்ல தகுதியான அணி பாகிஸ்தானே என்றும் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT