விளையாட்டு

"நான் பாத்துக்குறேன்" - கடைசி ஓவரில் சிக்ஸர் விளாசி தோனியை நினைவூட்டிய ஆட்ட நாயகன் ஹர்திக்

செய்திப்பிரிவு

துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவைப்பட சிக்ஸர் விளாசி தனது ஆட்டத்தின் மூலம் தோனியை நினைவூட்டி இருந்தார் ஹர்திக் பாண்டியா. இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார்.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டியில் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றியில் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்காற்றினார். ஆல் ரவுண்டராக பவுலிங் மற்றும் பேட்டிங்கில் முத்திரை படைத்தார் அவர்.

4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். தொடர்ந்து நெருக்கடியான தருணத்தில் ஜடேஜாவுடன் கூட்டணி அமைத்து அசத்தினார். 17 பந்துகளில் 33 ரன்களை விளாசி இருந்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்படும். அந்த ஓவரை பாகிஸ்தான் சார்பில் நவாஸ் வீசி இருந்தார். முதல் பந்தில் ஜடேஜா கிளீன் போல்ட் ஆகி விக்கெட்டை இழந்திருப்பார். தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக், சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்திருப்பார். அப்போது 4 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. அந்த ஓவரின் மூன்றாவது பந்து டாட் பாலாக கன்வெர்ட் ஆகியிருக்கும்.

நான்காவது பந்து வீசுவதற்கு முன் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த தினேஷ் கார்த்திக்கை பார்த்து ‘நான் பாத்துக்குறேன்’ என கண்ணால் சிக்னல் கொடுத்திருப்பார் ஹர்திக். அடுத்த பந்தே சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்திருப்பார். களத்தில் அவரது செயல் மற்றும் தன்னால் முடியும் என்று நம்பிக்கையும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது. தோனியும் இது போல கடைசி ஓவர்களில் சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்துள்ளார்.

SCROLL FOR NEXT