இப்போதுள்ள பிட்ச்களில் தானும் கும்ப்ளேயும் வீசியிருந்தால் விக்கெட்டுகள் எண்ணிக்கை ‘எங்கோ சென்றிருக்கும்’ என்ற ஹர்பஜன் விமர்சனத்திற்கு முன்னாள் இந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மனீந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தூர் பிட்ச் குறித்து ஹர்பஜன் தனது ட்விட்டரில் கூறும்போது, கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் இந்திய அணி ஆடிவரும் பிட்ச்களில் தானும், கும்ப்ளேயும் வீசியிருந்தால் தங்களது விக்கெட்டுகள் எண்ணிக்கை எங்கோ இருந்திருக்கும் என்று ஹர்பஜன் சிங் பிட்ச்கள் பற்றிய விமர்சனத்தைத் தொடுக்க கோலி முதலில் பதிலடி கொடுத்தார், தற்போது மனீந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆங்கில இணையதளத்திற்கு மனீந்தர் சிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஒரு மிகச்சிறந்த பவுலரான ஹர்பஜன் இது போன்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவருமே இத்தகைய பிட்ச்களில்தான் விக்கெட்டுகளைக் குவித்தார்.
மேலும் சச்சின் டெண்டுல்கர் போன்றோருடன் ஆடிய ஹர்பஜன் சச்சினிடமிருந்து எளிமையைக் கற்க வேண்டும். சச்சின் போல் இருந்தால் ஹர்பஜன் மீதான மரியாதை அதிகரிக்கும். அஸ்வினின் வெற்றியை ஹர்பஜன் மகிழ்ச்சியுடன் அணுக பழக வேண்டும்.
ஒரு ஸ்பின்னராக நான் கூறுவதெல்லாம், அஸ்வின் அபாரமான ஃபார்மில் உள்ளார், அவரது கையிலிருந்து பந்து வெளிவரும் விதமே ஒரு தனிப்பட்ட அழகுதான். இப்படியே அவர் தொடர்ந்து வீசினால் 500 விக்கெட்டுகளுக்கு மேல் குவிப்பார்.
இவ்வாறு கூறினார் மனீந்தர் சிங்.