விராட் கோலி (இந்தியா): இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது 100-வது டி 20 ஆட்டத்தில் களமிறங்க உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.33 வயதான அவர், பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். விராட் கோலி கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பரில் சர்வதேச அரங்கில் சதம் அடித்திருந்தார். 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி டெஸ்டில் 27 சதங்கள், ஒருநாள் போட்டியில் 43 சதங்கள் அடித்துள்ளார். இருப்பினும் கடந்த சில வருடங்களாக அதிக அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். ஆசிய கோப்பையில் அவர், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வனிந்து ஹசரங்க (இலங்கை): இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான லெக்-ஸ்பின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் வனிந்து ஹசரங்க. அந்தத் தொடரில் 16 ஆட்டங்களில் 26 விக்கெட்களை வேட்டையாடியிருந்தார். சக சுழற்பந்து வீச்சாளர்களான மகீஷ் தீக்சனா, ஜெஃப்ரி வான்டர்சே மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோருடன் இணைந்து சுழலுக்கு சாதகமான ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும். ஆசிய கோப்பையில் புத்துணர்ச்சியுடன் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹன்ட்ரட்’ தொடரில் ஹசரங்க கலந்துகொள்ளவில்லை. பின்வரிசை பேட்டிங்கிலும் ஹசரங்க வலுசேர்க்கக்கூடியவர்.
பாபர் அஸம் (பாகிஸ்தான்): முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக இந்தத் தொடரில் விளையாடாததால் கேப்டன் பாபர் அஸமின் பேட்டிங்கையே பெரிதும் நம்பி உள்ளது பாகிஸ்தான் அணி. 27 வயதான பாபர் அஸம் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். சமீபத்தில் நெதர்லாந்துக்கு எதிராகநடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் பாபர் இரு அரை சதங்கள் விளாசி தொடரை3-0 என கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தார். 2021-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 68 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதே மைதானத்தில்தான் தற்போது இரு அணிகளும் மீண்டும் சந்திக்க உள்ளன.
ஷகிப் அல்ஹசன் (வங்கதேசம்): களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஷகிப் அல் ஹசன் சர்ச்சைகளை சந்தித்துள்ளார். இருப்பினும் நீண்ட காலமாக சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திவருபவர். இம்முறை கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். இருப்பினும் வங்கதேச அணி கடைசியாக விளையாடிய 15, டி 20 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இந்த தோல்விகளுக்கு தனது 100-வது டி 20 ஆட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்க ஷகிப் அல் ஹசன் முயற்சி செய்யக்கூடும்.
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்): லெக் ஸ்பின்னரான ரஷித் கான் 66 டி 20 ஆட்டங்களில் விளையாடி 112 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டி 20 லீக்கில் கலந்து கொள்ளும் ரஷித் கான் பின்கள வரிசை பேட்டிங்கிலும் பலம் சேர்ப்பவராக திகழ்கிறார். சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் ரஷித் கான் முத்திரை பதிக்க ஆயத்தமாக உள்ளார்