ஆசிய பிட்ச்களில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு இந்திய மண்ணைக் கொண்டு பிட்ச் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியா தற்போது சுழற்பந்து வீச்சாளர்களின் நுட்பத்தை மேம்படுத்த முத்தையா முரளிதரனை ஆலோசகராக நியமித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக அபுதாபியில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு முத்தையா முரளிதரன் ஆலோசகராகப் பணியாற்றுவார்.
ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயனுக்கு காரம் பால் போடுவது எப்படி என்பதை முரளிதரன் கற்றுக் கொடுத்துள்ளார். இது மட்டுமல்ல ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் சயீத் அஜ்மல் பந்தை எதிர்கொள்வது பற்றியும் முரளிதரன் தனது ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார்.
இந்தியாவில் கடைசியாக விளையாடிய கிளார்க் தலைமை ஆஸ்திரேலியா அணி 4-0 என்று டெஸ்ட் போட்டிகளில் தோற்றது. அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை விளையாட ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர்.
முரளிதரன் இது பற்றி கூறுகையில், “ஆஸ்திரேலியா போன்ற அணிகளில் அதிகம் ஸ்பின்னர்கள் தேவையில்லை. மாறாக ஒருவர் போதுமானது, அதற்கு நேதன் லயன் சரியான தேர்வுதான். இவர் டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியா இவரை அணியில் வைத்திருக்க வேண்டும்.
தூஸ்ராவை சொல்லிக்கொடுப்பது கடினம், அதனால்தான் காரம் பால் போடுவது பற்றி அவருக்கு ஆலோசனை வழங்கினேன், மேலும் அவர் விரல்களால் பந்தைத் திருப்புபவர், நான் மணிக்கட்டின் மூலம் பந்தைத் திருப்புபவன் எனவே எனக்கு தூஸ்ரா சுலபம். விரல்களால் திருப்புபவர்களுக்கு சட்டென மணிக்கட்டு நிலையை மாற்ற முடியாது.
லயன் ஏற்கனவே காரம் பந்தை வீசத் தொடங்கியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் சில காரம் பந்துகளை வீசுவார் பிறகு சில ஆண்டுகளில் அதில் மன்னராகி விடுவார்.
எனக்கு பேட்டிங் நுணுக்கங்கள் தெரியாது. ஆனால் இன்னும் நான் பந்து வீசக்கூடிய நிலையில் இருப்பதால் வலைப்பயிற்சியில் நான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு வீச முடியும். நானும் அஜ்மலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பவுலர்கள்தான். என்றார் முரளிதரன்.
முரளிதரனை கொண்டு வர தீவிரம் காட்டியவர் பயிற்சியாளர் டேரன் லீமேன். இவர்தான் முரளிதரனையும், இலங்கை வீரர்களையும் கடுமையாக இழிவு படுத்தியவர். நிறவெறி வசை பொழிந்தவர்.
இன்று வேறு வழியில்லாமல் முரளிதரனை ஆலோசகராக நியமித்துள்ளனர்.