துபாய்: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் இருக்கும் இடத்தில் சஞ்சு சாம்சன்தான் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய - பாகிஸ்தான் அணிகள் நாளை மறுநாள் பலப்பரீட்சை செய்ய உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை தொடர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரையில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை என ஆறு அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. இந்தத் தொடர் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் நடைபெற உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் என மூன்று அணிகள் குரூப் ‘ஏ’ சுற்று போட்டியில் விளையாடுகின்றன. இந்நிலையில், இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் சஞ்சு சாம்சன்தான் இடம் பெற்று விளையாடி இருக்க வேண்டும் என கனேரியா தெரிவித்துள்ளார்.
“கே.எல்.ராகுல் இப்போது தான் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். ஆனால் அவர் அதற்குள் ஜிம்பாப்வே தொடரில் விளையாடினார். அதோடு அதற்கு முன்னதாகவே ஆசிய கோப்பைக்கான அணியிலும் இடம் பெற்றார். இது துரிதமாக எடுக்கப்பட்டுள்ள முடிவு. இந்திய அணியில் சிறப்பாக விளையாடும் சஞ்சு சாம்சன் உள்ளார். அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருந்தும் அவருக்கு அணியில் ரெகுலராக வாய்ப்பு கிடைப்பதில்லை. அணிக்கு உள்ளேயும், வெளியேயும் மாறி மாறி இருக்கிறார். அவருக்கு அண்மைய காலமாக வாய்ப்பு கிடைப்பதற்கு காரணம் பயிற்சியாளர் ராகுல் திராவிட். சாம்சனின் திறன் என்ன என்பதை அவர் நன்கு அறிவார்.
என்னை கேட்டால் கே.எல்.ராகுல் இருக்கும் இடத்தில் ஆசிய கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் ஆடியிருக்க வேண்டும். அதுதான் சரியாக இருந்திருக்கும். டி20 உலகக் கோப்பையில் கவனம் செலுத்தும் வகையில் ராகுலுக்கு சிறிது நேரம் கொடுத்திருக்கலாம். அதன் மூலம் அவர் ஃபார்முக்கு திரும்பி இருப்பார். அவர் அணியில் இடம் பெறவில்லை என்றால் ஊடகங்கள் கேள்வி எழுப்பி இருக்கலாம். அதனால் கூட இது நடந்திருக்கலாம். ஆனால் ஆசிய கோப்பையில் சஞ்சு விளையாடி இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.