விளையாட்டு

எனது பவுலிங் ஹீரோ ரமேஷ் பவார்: வங்கதேச இளம் ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன்

இரா.முத்துக்குமார்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தன் அறிமுக போட்டியில் ஆடிய வங்கதேச ஆஃப் ஸ்பின்னர் மெததி ஹசன் மிராஸ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

மெஹதி ஹசன் மிராஸின் ஆஃப் ஸ்பின் ஹீரோ ஒரு இந்திய ஆஃப் ஸ்பின்னர், அதுவும் அதிகம் அறியப்படாத வாய்ப்பளிக்கப்படாத ரமேஷ் பவார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும் பலருக்கும்.

ஆனால் 18 வயது மெஹ்தி ஹசன் மிராஸ் கூறும்போது, “தொலைக்காட்சியில் ரமேஷ் பவார் ஆஃப் ஸ்பின் வீசுவதை பார்த்திருக்கிறேன். நான் அவரை சந்தித்ததில்லை என்றாலும் ரமேஷ் பவார்தான் என் ஹீரோ.

அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடிய போது நான் தொலைக்காட்சியில் பார்த்து அவரிடமிருந்து உத்வேகம் பெற்றேன்” என்று கிரிக்ட்ராக்கர் என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

ரமேஷ் பவாருக்கே இது பயங்கர ஆச்சரியத்தை அளித்துள்ளது. “நான் உண்மையில் இதனை எதிர்பார்க்கவில்லை. நான் முதல் இன்னிங்சில் மெஹதி ஹசன் வீசியதைப் பார்த்தேன். அவர் ஒரு மரபான ஆஃப் ஸ்பின்னர் என்று தெரிகிறது. என்னுடைய பவுலிங் அவருக்கு உத்வேகத்தை அளித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

ரமேஷ் பவார் வங்கதேசத்துக்கு எதிராக 2007-ல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். அத்தோடு அவரது டெஸ்ட் வாழ்வு முடிந்தது. 31 ஒருநாள் போட்டிகளில் ஆடி 34 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சிக்கனவிகிதம் ஓவருக்கு 4.65.

மும்பையில் பிறந்த பவார் முதல்தர கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தவர். பேட்டிங்கில் 148 போட்டிகளில் 4,245 ரன்களை எடுத்துள்ளார். இதில் 7 சதங்கள் 17 அரைசதங்கள் அடங்கும். பந்து வீச்சில் 470 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில் 113 போட்டிகளில் 142 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். கிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்த போது இவரைப்போன்ற ‘லாபி’ இல்லாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT