ஹைதராபாத்: காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா.
35 வயதான சானியா கடந்த ஜனவரியில் இந்த சீசனுடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சானியா மிர்சா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்,“2 வாரங்களுக்கு முன்னர் கனடாவில் விளையாடிய போது எனது முழங்கையில் காயம் ஏற்பட்டது.
நேற்று ஸ்கேன் செய்து பார்க்கும் வரை அது எவ்வளவு மோசமானது என்பதை நான் உணரவில்லை, துரதிர்ஷ்டவசமாக எனது தசைநார் சிறிது கிழிந்துள்ளது. இதனால் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டி உள்ளது. எனவே 29-ம் தேதி தொடங்கும் அமெரிக்க ஓபனில் இருந்து விலகுகிறேன். இது சிறந்ததல்ல, மோசமான நேரமும் கூட. காயமானது எனது ஓய்வு திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதுதொடர்பான விவரங்களை நான் பிறகு தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.