மே.இ.தீவுகளுக்கு எதிராக யு.ஏ.இ.யில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 3-0 என்று தொடரைக் கைப்பற்றி ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசையில் 8-ம் இடத்திற்கு வந்துள்ளது.
2019 உலகக்கோப்பை போட்டிகளில் நேரடியாகத் தகுதி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு ஒருநாள் போட்டியும் இனி இறுதிப் போட்டிதான் என்ற நிலையில் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஆடாமல் உலகக்கோப்பைக்குத் தகுதி பெற 2017 செப்டம்பர் 30-க்குள் முதல் 8 அணிகளில் இடம்பெற தரநிலை எய்துவது கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்தத் தொடர் பாகிஸ்தானுக்கு ஒரு அக்னிப் பரிட்சையாக இருந்தது.
இந்நிலையில் கடினமான பணியை தன் மீது சுமந்து கொண்ட பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என்று வெற்றி பெற வீரர்களின் தன்னம்பிக்கைக்கும் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கும் உறுதுணையாக இருந்தார். கேப்டன் அசார் அலியும் தன்னம்பிக்கையுடன் ஆடினார்.
நேற்று அபுதாபியில், 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து பாபர் ஆஸம் மற்றும் கேப்டன் அசார் அலி ஆகியோர் சதங்களுடன் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 172 ரன்களுக்குச் சுருண்டு ஆறுதல் வெற்றி கூட கிட்டாமல் 0-3 என்று தோல்வி தழுவியது.
அசார் அலி 109 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 101 ரன்களை எடுக்க, பாபர் ஆசம் 106 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒருசிக்சருடன் 117 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் பாபர் ஆசம் தொடர்ச்சியாக 3 ஒருநாள் சதங்களை எடுத்த 3வது பாகிஸ்தானிய வீரரும் மொத்தமாக 8-வது வீரருமாவார். மே.இ.தீவுகள் தரப்பில் சுலைமான் பென் 10 ஓவர்களில் 51 ரன்களுக்கு ஒருவிக்கெட்டையும் சுனில் நரைன் 10 ஓவர்களில் 47 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றி சிக்கனம் காட்டினர்.
தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணியில் தினேஷ் ராம்தின் அதிகபட்சமாக 37 ரன்களை எடுக்க தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட் 32 ரன்களை எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் மொகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும் வஹாப் ரியாஸ் 2 விக்கெட்டுகளையும் இமாத் வாசிம், சொஹைல் கான், ஷோயப் மாலிக் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர் நாயகனாகவும், ஆட்ட நாயகனாகவும் பாபர் ஆசம் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 8-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.