ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ரசா பேட் செய்த விதத்தை பார்த்து, ஆட்டம் எங்கள் கைநழுவி சென்றதாக உணர்ந்தோம் என இந்திய ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு தோல்வி பயத்தை காட்டி இருந்தது ரசாவின் இன்னிங்ஸ் எனவும் சொல்லலாம்.
இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் சுலபமாக வென்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றிக்கு கொஞ்சம் மெனக்கெட்டது. இறுதியில் அந்த வெற்றி இந்தியாவின் வசமானது.
ஜிம்பாப்வே அணியின் ரசா 95 பந்துகளில் 115 ரன்களை சேர்த்து அசத்தினார். அவர் களத்தில் இருக்கும் வரை அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து வந்தவரை ‘சூப்பர்’ கேட்ச் ஒன்றை பிடித்து வெளியேற்றினார் சுப்மன் கில்.
“கடைசி 10 ஓவர்கள் அவர் பேட் செய்த விதத்தை பார்த்து ஆட்டத்தை எங்கள் வசமிருந்து பறித்து விடுவாரோ என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் எங்கள் திட்டத்தில் உறுதியாக இருந்தோம். இறுதி பந்து வரை அதை அப்ளை செய்து விளையாட வேண்டும் என முடிவு செய்தோம். அது எங்களுக்கு சாதகமானதாக அமைந்தது.
ஆசிய கோப்பைக்கு முன்னதாக இந்தத் தொடர் நல்லொதொரு ஆட்டமாக அமைந்தது. இது இந்திய அணி சார்பில் அந்த தொடரில் விளையாடும் வீரர்களுக்கு உதவும்” என அக்சர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார் அக்சர்.