விளையாட்டு

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவை கலைத்தது உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக்குழுவை கலைக்க உச்ச நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் கூட்டமைப்பின் தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 18-ம் தேதி உச்ச நீதிமன்றம், அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரஃபுல் படேலையும், அவர் தலைமையில் இயங்கிய குழுவையும் கலைத்து உத்தரவிட்டது. இதையடுத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தலை நடத்த முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தாவே தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இதன்படி வரும் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே 3-வது நபர் தலையீடு இருப்பதாக கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை விதித்தது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா). இதனால் வரும் அக்டோபர் மாதம் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இதைத் தொடர்ந்து பிஃபாவுடன் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.

இதையடுத்து மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட்,ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவை கலைக்கஉத்தரவிட்டது. மேலும் கால்பந்து கூட்டமைப்பின் தேர்தலை ஒருவாரம் தள்ளி வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தியாவில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்காகவும், இந்தியகால்பந்து கூட்டமைப்பின் மீது பிஃபாவிதித்துள்ள தடையை நீக்குவதற்காகவும் முந்தைய உத்தரவை மாற்றி அமைப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிஃபா கூறுவது போன்றுதேர்தலில் 36 மாநில சங்கங்களின் பிரதிநிதிகள் மட்டும் தேர்தலில் வாக்களிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT