ராபர்ட் லெவோண்டஸ்கி. 
விளையாட்டு

தனது பிறந்த நாளன்று பார்சிலோனா அணிக்காக கோல் ஸ்கோர் செய்த லெவோண்டஸ்கி

செய்திப்பிரிவு

சான் செபாஸ்டியன்: பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப் அணிக்காக தனது முதல் கோலை பதிவு செய்துள்ளார் கால்பந்தாட்ட வீரர் ராபர்ட் லெவோண்டஸ்கி. அதுவும் இந்த கோல் அவரது பிறந்தநாள் அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் ஸ்பெஷலானதாகும்.

ஸ்பெயின் நாட்டில் விளையாடப்பட்டு வரும் பிரபல கால்பந்து லீக் தொடர்களில் ஒன்று லா லிகா. இதன் நடப்பு சீசனில் பார்சிலோனா அணிக்காக லெவோண்டஸ்கி விளையாடி வருகிறார். நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் அவர் அந்த அணிகக்க விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு வரை அவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த கால்பந்து கிளப் அணியான Bayern அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்தாட்ட உலகில் கடந்த ஆண்டு அதிக கோல்களை பதிவு செய்த வீரரும் அவர்தான். கிளப் மற்றும் தேசிய அணிக்காக பதிவு செய்த கோல்கள் இதில் அடங்கும். மொத்தம் 69 கோல்களை போலந்து நாட்டை சேந்த அவர் ஸ்கோர் செய்திருந்தார்.

இந்நிலையில், பார்சிலோனா அணிக்காக தனது முதல் கோலை லெவோண்டஸ்கி பதிவு செய்துள்ளார். ரியல் சோசிடேட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மொத்தம் இரண்டு கோல்களை அவர் பதிவு செய்தார். முறையே ஆட்டத்தின் 1 மற்றும் 68 நிமிடங்களில் இந்த கோல்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த கோல்களை அவரது பிறந்த நாளன்று பதிவு செய்துள்ளது இன்னும் சிறப்பானதாக அமைந்துள்ளது.

ஆட்ட நேர முடிவில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை வென்றது. அந்த அணியின் பயிற்சியாளரும், முன்னாள் ஸ்பெயின் நாட்டு வீரருமான சேவி, தங்கள் அணியின் ஆதரவாளர்களின் பொறுமையை மனதார பாராட்டியுள்ளார். இந்த அணியில் தான் மெஸ்ஸி நீண்ட காலம் விளையாடி வந்தார்.

SCROLL FOR NEXT