விளையாட்டு

Ind Vs Zim | இந்திய அணியின் ‘லக்கி வீரர்’ - தீபக் ஹூடாவின் ஒர் உலக சாதனை

செய்திப்பிரிவு

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மூன்று 3 ஆட்டங்கள் கொண்ட தொடரின் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி தனது இன்னிங்ஸில் 38.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஷான் வில்லியம்ஸ் 42 ரன்களையும், ரியான் பர்ல் 39 ரன்களையும் சேர்த்தனர். இன்னசன்ட் கையா, ரஸா ஆகியோர் தலா 16 ரன்களை எடுத்தனர். 162 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 25.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் அட்டகாசமாக பேட் செய்து ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்த்தார். ஷிகர் தவண், சுப்மன் கில் ஆகியோர் தலா 33 ரன்களையும், தீபக் ஹூடா 25 ரன்களையும் எடுத்தனர்.

இந்தப் போட்டியில் ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா ஒரு தனித்துவமான உலக சாதனைப் படைத்தார். அது, சர்வதேச கிரிக்கெட்டில் ஹூடா அறிமுகமானதில் இருந்து, அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதே. இந்தியாவுக்காக தொடர்ச்சியாக 16 போட்டிகளில் விளையாடியுள்ளார் ஹூடா. இந்த 16 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் ஹூடா தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதில் இருந்து அவர் விளையாடிய ஏழு ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ருமேனியா நாட்டைச் சேர்ந்த சாத்விக் நடிகோட்லா என்ற வீரர் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து 15 போட்டிகளில் வெற்றி பெற்றதே உலக சாதனையாக இருந்தது. அதனை தீபக் ஹூடா முறியடித்துள்ளார்.

SCROLL FOR NEXT