விளையாட்டு

Ind vz Zim | 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல் - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

செய்திப்பிரிவு

ஹராரே: இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்டதொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று பகல் 12.45 மணி அளவில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் நிலையில் இந்திய அணி தொடரை கைப்பற்றும். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி டாஸில் வெற்றி பெறும் பட்சத்தில் பேட்டிங்கை தேர்வு செய்யக்கூடும். ஏனெனில் ஆசிய கோப்பை நெருங்கி வருவதால் வீரர்கள் தங்களது பேட்டிங் திறனை சோதித்துக்கொள்ள களத்தில் செலவிடும் நேரம் தேவையாக உள்ளது.

பந்து வீச்சில் மீண்டும் ஒரு முறை தீபக்சாஹர், பிரஷித் கிருஷ்ணா, அக்சர் படேல், முகமது சிராஜ் கூட்டணி ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும். ஷிகர் தவணுக்கு முன்னங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்குவது சந்தேகம்தான். அவர், களமிறங்காத பட்சத்தில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக இடம் பெறக்கூடும்.

இந்திய அணி முதலில் பேட் செய்தால்முதல் ஒரு மணி நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் பந்து அதிகளவில் ஸ்விங் மற்றும் சீம் நகர்வு இருக்கும். இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகஇருக்கக்கூடும். மேலும் 2-வது இன்னிங்ஸ்போது பந்து வீச்சுக்கு ஆடுகளம் பெரிய அளவில் கைகொடுக்காது. இந்த வகையில் பந்து வீச்சாளர்கள் புதிய திட்டங்களை கையாள முயற்சி செய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT