விளையாட்டு

“சச்சினுக்கும் தெரியும். அவரிடம் எதையும் எதிர்பார்க்கலை” - நிதி நெருக்கடியில் வினோத் காம்ப்ளி

செய்திப்பிரிவு

மும்பை: கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தை கவனிக்க தனக்கு வேலை வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தன் நிலை குறித்து தனது பால்ய கால நண்பரும், உடன் விளையாடிய சக வீரருமான சச்சின் டெண்டுல்கருக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரிடமிருந்து தான் எந்தவொரு உதவியையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

50 வயதான அவர் இந்திய அணிக்காக மொத்தம் 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த 2019-ல் மும்பையில் நடைபெற்ற டி20 லீக்கில் பயிற்சியாளராக அவர் செயல்பட்டுள்ளார். இப்போது அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் பென்ஷனாக கிடைத்து வருகிறது. அது மட்டும் தான் தனது வாழ்வாதாரம் எனவும் தெரிவித்துள்ளார்.

“ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரனான எனக்கும், எனது குடும்பத்திற்கும் வாழ்வாதாரமாக இப்போதைக்கு இருப்பது பிசிசிஐ வழங்கி வரும் பென்ஷன் மட்டும்தான். அதற்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இப்போது கவுரவ பயிற்சியாளராக மும்பையில் உள்ள மைதானங்களில் கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறேன். இப்போதைக்கு எனக்கு வேலை வேண்டும். அது தொடர்பாக மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் விஜய் பாட்டீலிடம் முறையிட்டுள்ளேன். மும்பை கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. எனது வாழ்வை இந்த விளையாட்டுக்காக அர்ப்பணிக்கிறேன்.

சச்சினுக்கு அனைத்தும் தெரியும். நான் அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் எனக்கு டெண்டுல்கர் மிடில்செக்ஸ் குளோபல் அகாடமியின் அசைன்மென்ட் கொடுத்து உதவினார். அவர் எனக்கு சிறந்த நண்பராக இருக்கிறார். இளம் வீரர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்” என வினோத் காம்ப்ளி தெரிவித்துள்ளார்.

அவர் பயன்படுத்தி வரும் செல்போனின் டிஸ்பிளே சேதமடைந்து உள்ளதாம். தங்க செயின், பிரேஸ்லெட் மற்றும் வாட்ச் அணிந்திருப்பது அவரது டிரேட் மார்க் அடையாளம். ஆனால் இப்போது அவர் அதனை அணிந்திருக்கவில்லை.

SCROLL FOR NEXT