துபாய்: எதிர்வரும் 2023-27 காலகட்டத்தில் நடைபெற உள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆடவர் கிரிக்கெட் ஃபார்மெட்டுக்கான போட்டிகள் தொடர்பான சுற்றுப்பயண திட்டத்தினை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). நடப்பு 2019-23 கிரிக்கெட் போட்டிகளுக்கான எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது எதிர்வரும் 2023-27க்கான போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக சொல்லப்பட்டுள்ள நிலையில் அந்த ஃபார்மெட் போட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர்களாக உள்ள 12 கிரிக்கெட் அணிகளுக்கான அட்டவணையின்படி மொத்தம் 777 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 173 டெஸ்ட், 281 ஒருநாள் மற்றும் 326 டி20 போட்டிகள் அடங்கும். இதில் இரண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற உள்ளது. 2025 வாக்கில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மீண்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பலப்பரீட்சை செய்யும் போது தலா 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-23 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 151 டெஸ்ட், 241 ஒருநாள் மற்றும் 301 டி20 போட்டிகளாக திட்டமிடப்பட்டது.