நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இப்போட்டியில் விராட் கோலி - ரஹானே ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 365 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்தது.
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்து வருகிறது.
இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 347 பந்துகளில் அபாரமாக ஆடி 18 பவுண்டரிகளுடன் 200 ரன்களைக் கடந்தார்.
இந்திய அணியின் ஸ்கோர் 465-ஆக இருந்தபோது ஜீதன் படேலின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி விராட் கோலி ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் 366 பந்துகளை சந்தித்த அவர் 211 ரன்களைச் சேர்த்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக எடுத்த 200 ரன்களே அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
கோலி - ரஹானே ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 365 ரன்களைச் சேர்த்தது. இது இந்திய அளவில் புதிய சாதனையாகும். இதற்கு முன்னர் டெண்டுல்கர் - வி.வி.எஸ்.லட்சுமண் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 353 ரன்களைக் குவித்ததே சாதனையாக இருந்தது.
இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்களாக இருந்தபோது ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார். இதைத் தொடர்ந்து தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடவந்த நியூஸிலாந்து அணி ஆட்டநேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை எடுத்திருந்தது. குப்தில் 17 ரன்களுடனும், லதாம் 6 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.