பேட்மிண்டன் வீரர் சங்கர் முத்துசாமி. 
விளையாட்டு

BWF உலக ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசை: முதலிடத்தில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி

செய்திப்பிரிவு

BWF உலக ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். உலக ஜூனியர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள ஐந்தாவது இந்தியராக இவர் அறியப்படுகிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் 18 வயதான சங்கர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதே போல மகளிர் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை இப்போது பிடித்துள்ளார் இந்திய வீராங்கனை தஸ்னிம் மிர். அதோடு ஜூனியர் பிரிவில் ஒரே நேரத்தில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியர்கள் முதலிடத்தை பிடித்திருப்பது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் உலக ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தை ஆதித்யா ஜோஷி (2014), சிரில் வெர்மா (2016), லக்ஷ்யா சென் (2017) போன்ற இந்தியர்கள் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் ஸ்பெயினில் நடைபெற உள்ள உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் சங்கர். 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான பிரிவில் தேசிய அளவில் நடைபெற்ற தேர்ச்சி போட்டியில் (ட்ரையல்) முதலிடம் பிடித்திருந்தார் அவர்.

“நான் மகிழ்ச்சியாக உள்ளேன். அவனது விளையாட்டு கெரியரில் மிக முக்கியமான மைல்கல் இது. எதிர்வரும் உலக சாம்பியன்ஷிப்பில் அவனது செயல்பாடு முதல் நிலை வீரருக்கான தரத்தில் இருக்கும்” என சங்கரின் நீண்ட நாள் பயிற்சியாளர் அரவிந்தன் சாமியப்பன் தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT