மும்பை: காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
22 வயதான இளம் வீரர்தான் வாஷிங்டன் சுந்தர். தமிழகத்தை சேர்ந்தவர். வலது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் இடது கை பேட்ஸ்மேனான இவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த 2017 வாக்கில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் டி20 போட்டிகளில் விளையாடியது தான் அதிகம். மொத்தம் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இந்நிலையில், இவர் வரும் 18 முதல் 22 வரையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி இருந்தார்.
இவர் இங்கிலாந்து நாட்டில் அண்மையில் நடைபெற்ற கவுன்டி கிரிக்கெட் தொடரின் போட்டி ஒன்றில் லங்காஷயர் (Lancashire) அணிக்காக விளையாடி இருந்தார். அப்போது அவருக்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் ஜிம்பாப்வே தொடரை வாஷி மிஸ் செய்துள்ளார்.
முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடரை தசைப் பிடிப்பு காரணமாக வாஷி மிஸ் செய்தார். கரோனா தொற்று காரணமாக தென்னாப்பிரிக்க தொடரையும் மிஸ் செய்தார். கடந்த ஐபிஎல் சீசனிலும் அவர் காயத்தால் அவதிப்பட்டார்.
மாற்று வீரர்? - வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடிய ஷாபாஸ் அகமது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் அறிமுக வீரராக களம் இறங்குவார்.