நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியாவும், பேட்டிங்கில் விராட் கோலியும் சிறப்பாக செயல்பட்டனர்.
தர்மசாலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அவருக்கு அறிமுக தொப்பியை கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் வழங்கினார். வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா களமிறக்கப்பட்டனர். சுழற்பந்து வீச்சாளராக அக் ஷர் படேல் இடம் பெற்றார்.
விக்கெட்கள் சரிவு
இதையடுத்து நியூஸிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்தில், டாம் லதாம் களமிறங்கினர். தொடக்க ஓவர்களை உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா வீசினர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.
பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டிய குப்தில் கடைசி பந்தில், ஸ்லிப் திசையில் நின்ற ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குப்பில் 11 பந்தில் 12 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 9 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
ராஸ் டெய்லர் சந்தித்த முதல் பந்திலேயே தோனியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இந்த விக்கெட்டையும் உமேஷ் யாதவே கைப்பற்றினார். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அதிரடி வீரர் கோரே ஆண்டர்சனை 4 ரன்னிலும், அடுத்து களம் புகுந்த விக்கெட் கீப்பர் லூக் ரோன்ஜியை ரன் எதும் எடுக்காத நிலையிலும் வெளியேற்றினார் பாண்டியா.
12.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து அணி தத்தளித்தது. 19-வது ஓவரை வீசிய பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான கேதார் ஜாதவ் இரு விக்கெட்களை வீழ்த்தி நியூஸிலாந்து அணிக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்தில் நீஷாம் 10, மிட்செட் சாண்ட்னர் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்போது ஸ்கோர் 18.4-வது ஓவரில் 65 ஆக இருந்தது.
சீரான இடைவேளையில் விக்கெட்கள் ஒருபுறம் சரிந்தாலும் தொடக்க வீரர் டாம் லதாம் நிதானமாக விளையாடி 77 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இது அவரது 5-வது அரை சதமாக அமைந்தது. லதாமின் பொறுப்பான ஆட்டத்தால் நியூஸிலாந்து அணி 29.1-வது ஓவரில் 100 ரன்களை கடந்தது.
அவருக்கு சற்று உறுதுணை யாக விளையாடிய பிரேஸ்வெல் 46 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்த நிலையில் அமித் மிஸ்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி இந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். 40 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் தனது முதல் அரை சதத்தை சவுத்தி நிறைவு செய்தார். அவரது அதிரடியால் அணியின் ஸ்கோர் சற்று சீராக உயரத் தொடங்கியது. 41.3-வது ஓவரில் ஸ்கோர் 177 ஆக இருந்த போது அமித் மிஸ்ரா வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாச ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார் டிம் சவுத்தி.
உயரமாக அவர் தூக்கி அடித்த பந்தை மணீஷ் பாண்டே கேட்ச் செய்தார். முன்னதாக சவுத்தி 2 ரன்னில் இருந்த போது அவர் கொடுத்த கேட்ச்சை உமேஷ் யாதவ் தவறவிட்டிருந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அவர் 45 பந்தில், 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் விளாசி வெளி யேறினார்.
190 ரன்களில் சுருண்டது
9-வது விக்கெட்டுக்கு லதாம்-சவுத்தி ஜோடி 71 ரன்கள் சேர்த்தது. சவுத்தி ஆட்டமிழந்ததும் டாம் லதாம் அதிரடியாக விளையாடினார். அமித் மிஸ்ரா வீசிய 44-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விரட்டிய அவர் அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அமித் மிஸ்ரா கடைசி விக்கெட்டாக இஷ் சோதியை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். அவர் 10 பந்தில் ஒரு ரன் சேர்த்தார்.
முடிவில் நியூஸிலாந்து அணி 43.5 ஓவரில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டாம் லதாம் 98 பந்துகளில், 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட்களும், உமேஷ் யாதவ், கேதார் ஜாதவ் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதையடுத்து 191 ரன்கள் இலக்குடன் இந்திய அணி பேட் செய்தது. ரோஹித் சர்மா - அஜிங்க்ய ரஹானே ஜோடி சீரான தொடக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவரில் 49 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 14 ரன்னில் பிரேஸ்வெல் பந்தில் வெளியேறினார். ரஹானே 34 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் நீஷாம் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி, மணீஷ் பாண்டே நிதானமாக விளையாடினர். 19-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. 22 பந்தில், 17 ரன்கள் எடுத்த நிலையில் இஷ் சோதி பந்தில் மணீஷ் பாண்டே ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் தோனி, கோலியுடன் இணைந்தார்.
அசத்தல் வெற்றி
கோலி 55 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 37-வது அரை சதத்தை கடந்தார். வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி ரன் அவுட் ஆனார். அவர் 24 பந்துகளில், தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 21 ரன்கள் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய கேதார் ஜாதவ் 12 பந்தில் 10 ரன்கள் சேர்த்தார். இஷ் சோதி பந்தில் கோலி சிக்ஸர் விளாச இந்திய அணி 33.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
விராட் கோலி 81 பந்துகளில், 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
வில்லியம்சன்: ஓட்டுமொத்தமாக பேட்டிங் ஏமாற்றமாக இருந்தது. ஆரம்பத்திலேயே அதிக விக்கெட்களை இழந்த நிலையில் கடைசி கட்ட பேட்டிங் சற்று கைகொடுத்தது. இந்திய அணி இலக்கை சிறப்பாக துரத்தக்கூடிய அணி. நாங்கள் கடினமான அணிதான். எனினும் ஒருங்கிணைந்து செயல் படவேண்டும். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் இந்திய அணியை தோற்கடிக்க முடியும்.
தோனி: பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஹர்திக் பாண்டியா நல்ல நீளத்தில் பந்து வீசினார். உமேஷ் யாதவ் தொடர்ச்சியாக விரைவாக செயல்பட்டார். அதேபோல் மிஸ்ரா, அக் ஷர் படேல் நன்றாக வீசினர். விரைவாக நாங்கள் விக்கெட்களை வீழ்த்தியிருக்காவிட்டால் நிச்சயம் 280 முதல் 300 ரன்கள் வரை எதிரணியினர் எடுத்திருக்கக்கூடும். ஏனேனில் ஆடுகளம் அதுபோன்றதுதான்.