விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வளைகாப்பு விழா கூட நடத்தவில்லை - மனம் திறக்கிறார் பதக்கம் வென்ற ஹரிகா

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஏ மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் அணி முதன்முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்ததில் நிறைமாத கர்ப்பிணியான கிராண்ட் மாஸ்டர் ஹரிகா துரோணவல்லி முக்கிய பங்காற்றியிருந்தார். இதன் மூலம் விளையாட்டு உலகில், கர்ப்ப காலங்களில் பங்கேற்று சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய நட்சத்திரங்களின் வரிசையில் இணைந்துள்ளார் ஹரிகா.

குழந்தை பிறப்பை எதிர்நோக்கியுள்ள 31 வயதான ஹரிகா, சொந்த நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இந்தத் தொடரில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தனது நீண்டகால கனவை நனவாக்கினார். ஹரிகாவின் மன உறுதி மற்றும் அவரது குடும்பத்தினர், சக வீரர்கள் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியவை அளித்த ஆதரவும் பலனளித்தது. 7 சுற்றுகளில் விளையாடிய ஹரிகா ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காமல் அனைத்தையும் டிரா செய்து இந்திய அணிக்கு பெரிதும் உதவியிருந்தார். கடைசி இரு சுற்றுகளில் மட்டும் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.

கடைசி சுற்று தொடங்குவதற்கு முன்னர்வரை இந்திய ஏ அணி புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் இருந்தது. ஆனால் அமெரிக்காவிடம் கடைசி சுற்றில் தோல்வியடைந்ததால் தங்கப் பதக்கம் கைநழுவிச் சென்றது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தனக்கு எந்தவகையில் திருப்திகரமாக இருந்தது, கர்ப்பிணியாக இந்தத்தொடரில் மேற்கொண்ட பயணம் குறித்து ஹரிகா துரோணவல்லி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

13 வயதில் நான் இந்திய மகளிர் செஸ் அணியில் அறிமுகமானேன். 18 ஆண்டுகள் ஆகிறது, இதுவரை 9 ஒலிம்பியாட் போட்டிகளில் விளையாடி உள்ளதால், இந்திய மகளிர் அணிக்காக பதக்க மேடையில் இடம்பிடிக்க வேண்டும் என்று கனவு கண்டு, இறுதியாக இந்த முறை வெற்றி பெற்றேன்.

இது மிகவும் உணர்ச்சிபூர்வமானது. ஏனெனில் 9 மாத கர்ப்பிணியாக நான் இதை செய்துள்ளேன். இந்தியாவில் ஒலிம்பியாட் நடைபெறுவதைப் பற்றி நான் கேள்விப்பட்டபோது, எனது மருத்துவரிடம் ஆலோசனை நடத்தினேன். அப்போது அவர், எந்த சிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் விளையாடுவது சாத்தியம் என்று கூறினார்.

அதிலிருந்து, ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வதில் தான் என் வாழ்க்கை சுழன்றது. எனது ஒவ்வொரு அடியும் அதை சாத்தியப்படுத்தவே அர்ப்பணித்தேன்.

வளைகாப்பு, நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை, பதக்கம் வென்ற பிறகுதான் எல்லாம் என்று முடிவு செய்தேன்.. நான் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு நாளும் நான் உழைத்துக்கொண்டிருந்தேன். கடந்த சில மாதங்களாகவே நான் இந்த தருணத்திற்காக வாழ்ந்தேன், ஆம், நான் அதை செய்தேன். இந்திய மகளிர் செஸ் அணிக்காக முதல் ஒலிம்பியாட் பதக்கம் வென்றுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT