விளையாட்டு

கேப்டனுக்கு அதிகாரமில்லை; பயிற்சியாளர், அணி நிர்வாகமே ஆட்சி செய்கிறது: மைக்கேல் கிளார்க் ஆதங்கம்

இரா.முத்துக்குமார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை நடத்துவது பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகமே கேப்டன் அதிகாரம் தூர்ந்து போய் விட்டது என்று மைக்கேல் கிளார்க் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

‘மை ஸ்டோரி’ என்ற அவரது புதிய புத்தகத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் போக்கு பற்றி ஆதங்கம் தெரிவித்துள்ளார் மைக்கேல் கிளார்க்.

டேரன் லீ மேன் தனக்கு மிகவும் பிடித்தவர் என்று கூறியுள்ள மைக்கேல் கிளார்க், தான் பொதுவாக தற்போது இருக்கும் அமைப்பு முறையைத்தான் நான் விமர்சிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

2013 ஆஷஸ் தொடரின் போது மிக்கி ஆர்தரிடமிருந்து டேரன் லீ மேன் பயிற்சியாளர் பொறுப்பை பெற்றார், அப்போதிலிருந்து கேப்டன்சி தொடர்பாக தனக்கு அதுவரை இருந்த சில அதிகாரங்கள் பறிக்கப்பட்டது என்கிறார் கிளார்க். ஆனால் அணித்தேர்விலிருந்து தான் விலகியது தன் சொந்த முடிவே என்றும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார் கிளார்க்.

2014 ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் அணியில் இடம்பெற வேண்டும் என்று கேப்டனாகத் தான் கோரியதை பயிற்சியாளரும், அணித் தேர்வுக்குழுவும் நிராகரித்ததை சுட்டிக் காட்டியுள்ளார் மைக்கேல் கிளார்க்.

“நடைமுறையில் சில அதிரடி மாற்றங்களை நான் தாமதமாகவே ஏற்று கொண்டேன். அணி திறன் மதிப்பீட்டாளர் பாட் ஹோவர்ட் ரக்பியிலிருந்து வந்தவர், அங்கு பயிற்சியாளர்தான் எல்லாம். அதனால் அவருக்கு பிரச்சினை தெரியவில்லை. ரக்பியில் களத்தில் கேப்டன் தான் பாஸ், களத்திற்கு வெளியே பயிற்சியாளர் பாஸ். ஆனால் கிரிக்கெட்டை நான் அவ்வாறாகப் பார்க்கவில்லை.

கிரிக்கெட் கால்பந்து அல்ல, பயிறிசியாளர் ஆட்டி வைக்கும் விதத்தில் இங்கு ஆட முடியாது. எனக்கு பொறுப்பு இருக்கிறது எனவே எனக்கு ஒரு முடிவு குறித்த காரண காரியங்கள் அவசியமானது.

இயன் சாப்பல் என்னிடம் அடிக்கடி கூறுவார், வெற்றி-தோல்வி கணக்கு உன்பெயரில்தான் இருக்கும் என்று. கேப்டனிடமிருந்து மில்லியன் விஷயங்களை அவர்கள் எடுத்து விடுகின்றனர். அதாவது அப்போதுதான் நான் களத்தில் கவனம் செலுத்த முடியும். சரி! ஆனால் எனக்கு அந்த விஷயங்கள் தேவை எனும்போது எப்படி என்னை அதிலிருந்து விலக்க முடியும்? எல்லைக்கோட்டுடன் கேப்டன் பணி முடிந்து விடுவதில்லை. களத்திற்கு வெளியே நான் செயலாற்றும் விதமும் களத்தில் பிரதிபலிக்குமே.

என்னுடைய வருத்தங்கள் எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் கிடையாது, எனக்கு டேரன் லீ மேனை மிகவும் பிடிக்கும்.

ஆனால் மிக்கி ஆர்தர் என்னைக் கேட்காமல் முடிவுகளை எடுக்க மாட்டார். இதுதான் நான் பழகிய விதம். ஆனால் இப்போது வித்தியாசமாக உள்ளது. இன்னும் கூட என்னால் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள கடினமாகவே உள்ளது” என்கிறார் கிளார்க்.

SCROLL FOR NEXT