விளையாட்டு

நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு ஆஸி. கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி

செய்திப்பிரிவு

மெல்போர்ன்: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தீவு தேசமான இலங்கை மக்களுக்கு நிதியுதவி அளித்து ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் வீரர்கள் உதவியுள்ளனர்.

கடந்த ஜூன் - ஜூலை வாக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி இருந்தது. அந்தப் பயணம் நெருக்கடியில் சிக்கி இருந்த இலங்கை மக்களை சற்று இளைப்பாற செய்திருந்தது.

இந்நிலையில், பேட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் ஃபின்ச் தலைமையில், இந்தத் தொடரில் இலங்கையில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியினர் அந்த நாட்டுக்கு உதவும் வகையில் சுமார் 45 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை யுனிசெஃப் அமைப்புக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

ஆஸ்திரேலிய வீரர்கள் அளித்துள்ள இந்த நிதியை யுனிசெஃப் அமைப்பு கல்வி உதவி, சுகாதாரம், ஊட்டச்சத்து, மனநலம் உள்ளிட்ட திட்டங்களுக்காக இலங்கையில் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 2 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிகிறது.

இது இலங்கையில் வாழும் குடும்பங்களின் நல்வாழ்விற்காக வழங்கப்பட்ட நிதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 வாக்கில் கரோனா தொற்று அலையால் இந்தியா பாதிக்கப்பட்டபோது ஆக்ஸிஜன் சப்ளைக்காக சுமார் 50 ஆயிரம் டாலர்கள் நிதி உதவியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் மற்றும் கம்மின்ஸ் வழங்கியிருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT