மெல்பேர்ன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், முழங்கால் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதுதான் தனது கடைசி அறுவை சிகிச்சை என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் அதிவேகமாக பந்து வீசிய பவுலராக அறியப்படுகிறார் அக்தர். அவரது டாப் பவுலிங் ஸ்பீடு மணிக்கு 161.3 கிலோமீட்டர் வேகம். அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போன் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது இரண்டு கால்களின் மூட்டு பகுதியிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. குணமடைய சில காலம் பிடிக்கும் என நம்புகிறேன். உங்களது பிரார்த்தனைகள் வேண்டும். எனக்கு இந்த நேரத்தில் உதவிய நண்பர் கமில் கானுக்கு நன்றி.
நான் அதிகமாகவே கிரிக்கெட் விளையாடி விட்டேன். நான் அதை தொடர்ந்திருந்தால் இந்நேரம் வீல் சேரில்தான் போயிருக்க வேண்டும். பாகிஸ்தானுக்காக விளையாடியது மதிப்புமிக்கது. நான் மீண்டும் அதை செய்ய வேண்டுமென்றாலும் நிச்சயம் செய்வேன்” என அக்தர் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.
46 டெஸ்ட், 163 ஒருநாள் மற்றும் 15 டி20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியவர் அக்தர்.